அதிமுக பொதுக்குழு நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டது.. ஓபிஎஸ் தரப்பு திடீர் அவமதிப்பு வழக்கு!
சென்னை: அதிமுக பொதுக்குழு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. அந்தப் பொதுக்குழு கூட்டத்தில், 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் அறிவித்தனர். தொடர்ந்து மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு குழப்பங்களுடனும், பரபரப்புடனும் பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது.
இதனைத்தொடர்ந்து அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயல் என்றும், நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications