ஒரு தலித் முதல்வராக முடியாது..நம்பிக்கை இருந்தா என் பின்னாடி வாங்க..திருமாவளவன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் வரும் போகும் ஆனால் ஒருபோதும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக முடியாது எனவும், சாதி ஒழிப்பே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம்.. அதில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் தன் பின்னால் வர வேண்டும் என பேசி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன்..
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகவும், பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், எம்பி, எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவனின் கருத்துகள் தான் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறது. குறிப்பாக அருந்ததியர் இட ஒதுக்கீட்டு தீர்ப்புக்கு தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் விசிக அந்த தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, தமிழகத்தில் எத்தனை கட்சிகள் வந்தாலும் ஒரு தலித் முதல்வராக முடியாது என பேசி அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் திருமா. நிகழ்ச்சியில் பேசிய அவர்,” பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிக்கவும், வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்
கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் சொன்ன கருத்துக்களை அந்த தீர்ப்பிலிருந்து நீக்குவதற்கு ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு பட்டியல் சமூகத்தின் இட ஒதுக்கீடு உரிமையை நசுக்கும் வகையில் உள்ளது பட்டியல் சமூகத்தின் இட ஒதுக்கீட்டு அளவை மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்குவதே நியாயமாக இருக்கும். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை நடைமுறை செய்வதற்கு வன்னியர்கள் எந்த அளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதற்கான போதிய தரவுகள் இல்லை.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என சொல்வது எஸ்டி மக்களுக்காக இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்/ தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் ஒரு காலத்திலும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக ஆக முடியாது. நிறைய பேர் ஜனநாயகம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாடம் எடுக்கிறார்கள்.
விசிகவிற்கு ஜனநாயகம் குறித்து யாரும் பாடம் எடுக்க தேவையில்லை. சாதி ஒழிப்பு என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நோக்கம். அந்த நோக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும் என் மீதும் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் பின்னே வாருங்கள். சாதி உள்நோக்கத்துடன் இருக்கும் யாரும் என் பின்னால் வர வேண்டாம். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் அருந்ததிய சமூகத்தினருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதற்கும் ஆந்திராவில் இருக்கும் ஒதுக்கீட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு பட்டியில் சமூக இட ஒதுக்கீட்டில் சப் கோட்டா எனப்படும் முன்னுரிமை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஆந்திராவில் பட்டியல் சமூகத்தை தனியாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குகிறார்கள். எனவே பட்டியல் சமூகத்தான மீதான தாக்குதலாக இந்த தீர்ப்பை பார்க்க வேண்டும். ஆதிக்க சாதி இந்து சமுதாய மக்களின் ஆதிக்கம் இந்தியா முழுவதும் இருக்கிறது. அதை வைத்து தான் பல மாநிலங்களில் தலித் மக்கள் சிதறடிக்கப்படுகிறார்கள். உத்தரபிரதேசத்திலும் யோகி ஆதித்யநாத் இதையே தான் செய்கிறார்” என்றார்.












Click it and Unblock the Notifications