திமுக கூட்டத்தில் பாலியல் தொல்லை! கதறி அழுத பெண் காவலர்! நிர்வாகிகளை கைது செய்ய காவல்துறை தீவிரம்!
சென்னை : முன்னாள் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டதில் பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புகாருக்குள்ளானவர்களை போலீசார் கைது செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.

திமுக கூட்டம்
நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு கலந்து கொண்டிருந்த நிர்வாகிகள் சிலர் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தலைவர்கள் பேசும் போதே பின்னாலிருந்து கூச்சல் எழுப்பி கூட்டத்தில் பிரச்சனை செய்த அவர்களை அங்கிருந்த நிர்வாகிகள் கண்டித்துள்ளனர்.

பெண் காவலர்
மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தொடர்ந்து அவர்கள் ஆபாசமாக பேசி மெரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில், மற்றோருவர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

திமுக நிர்வாகிகள்
விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

பாலியல் தொந்தரவு
திமுக ஆட்சியில் திமுக நிர்வாகிகள் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததைர பெரிதுபடுத்த வேண்டாம் என அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகி ஒருவர் காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் காவலர் கதறி அழுதும் எந்த நடவடிக்கையும் செய்ய முடியாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் கையை பிசைந்து கொண்டிருப்பதை கண்டு அங்கிருந்த பெண் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கைது நடவடிக்கை?
இந்த நிலையில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதனிடையே அந்த பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் புகாரை பெற்றுள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுகவினர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications