சென்னையில் நைட்டில் இப்படி மட்டும் போயிடாதீங்க.. வசமாக சிக்க வைத்த ஒற்றை போட்டோ.. பறந்த ஃபைன்
சென்னை: சென்னை கீழ்பாக்கம் கார்டனில் 3 பேர் சென்ற வாகனத்திற்கு 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் யாரும் சோதனை செய்ய மாட்டார்கள் என்ற அவர்களின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. ஒற்றை போட்டோவால் சிக்கி உள்ளனர்.
சென்னை இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மட் அணிந்து செல்வது தான் பாதுகாப்பானது. உடல் நலத்திற்கு மட்டுமல்ல, பர்சுக்கும் அதுதான் பாதுகாப்பானது.

நீங்கள் இருசக்கர வாகனத்தை வாங்கும் போதே இரண்டு ஹெல்மெட் வாங்கிவிடுங்கள். ஒரு ஹெல்மெட் மட்டும் வாங்கினாலும் அபராதம் நிச்சயம் உங்களுக்கு விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒருமுறை ஹெல்மெட் இல்லாமல் சிக்கினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பார்கள். நீங்கள் ஹெல்மெட் போட்டு உங்கள் பின்னால் உள்ளவர் ஹெல்மெட் போடாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் விதிப்பார்கள்.
தலைகவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றாலும் அபராதம் உறுதி. ஏனெனில்சென்னையில் பல இடங்களில் தானியங்கி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் எல்லாம் போலீசாரின் வேலையை கச்சிதமாக செய்கின்றன.
சிக்னலில் நிற்காமல் மீறி சென்ற கார்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றன. ஒருவழி பாதையில் சென்றாலும் சில பகுதிகளில் அபராதம் விதிக்கப்படுகிறது. சிக்னலில் லைன் கோட்டை தாண்டி நின்றாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே போலீசார் சோதனைக்கு அருகில் இல்லை என்று நினைத்து போக்குவரத்து விதிகளை மீறாதீர்கள்.
சென்னையில் போக்குவரத்து போலீசார் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் சோதனை நடத்துகிறார்கள் என்றால், பொதுமக்களும் சோதனை நடத்துகிறார்கள். ஆம்..பொதுமக்கள் தங்கள் கண் முன்னே யாராவது போக்குவரத்து விதிகளை மீறி சென்றால் உடனே சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து புகார் அளிக்கிறார்கள். அப்படி புகார் அளித்தால் உடனே நடவடிக்கையும் எடுக்கிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ஆன்லைனிலேயே அபராதமும் விதிக்கிறார்கள்.
குழந்தையை பள்ளிக்கு விட வந்தவர்கள் தொடங்கி, பக்கத்து தெருவில் காய் வாங்க போனவர்கள் வரை ஹெல்மெட் அணியாமல் போய் அபராதத்தில் சிக்கியவர்கள் பலர் சென்னையில் இருக்கிறார்கள். இவை எல்லாம் பொதுமக்களே, காவல்துறைக்கு போட்டோ எடுத்து மாட்டிவிட்டதால் வந்த அபராதங்கள் ஆகும்.

அப்படித்தான் இரவு வேளையில் சென்னை கீழ்பாக்கம் கார்டனில் 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களுக்கு 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் போனதற்காக 2 ஆயிரம் ரூபாயும், டிரிபிள்ஸ் போனதற்காக ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அபராதம் குறித்த சலானை சென்னை போக்குவரத்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications