தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு.. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடை இல்லை!
சென்னை: தமிழகத்தில் இன்று இரண்டாவது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடப்பதால் வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகள் தினமும் உச்சத்தில் இருந்து வருகின்றன. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியுள்ளது.

மீண்டும் முழு ஊரடங்கு
கொரோனவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் தமிழக அரசு சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தது. தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

கடைகள் அடைப்பு
அதன்படி கடந்த வாரம் முழு ஊரடங்கு போடப்பட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாவது வாரமாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு நாளை காலை 4 மணி வரை 30 மணி நேரம் அமலில் இருக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எவற்றுக்கும் அனுமதி கிடையாது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இவை இயங்கலாம்
அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தொடர்புடைய பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால்
வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு எந்த வித தடையும் விதிக்கப்படவில்லை.

போக்குவரத்து கிடையாது
சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படும். முழு ஊரடங்கு நாளில் திருமண விழாக்களில்100 நபர்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி உண்டு. அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து சேவைக்கும், ஆட்டோ, டாக்சி சேவைக்கும் அனுமதி இல்லை.

அடையாள அட்டை கட்டாயம்
எனினும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் இயங்கும் என்பதால் பெரும்பாலான பயணிகள் ஆட்டோ, டாக்சியை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர். ஆனால் பயணம் தொடர்பான டிக்கெட்டை வைத்து இருந்தால்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்கள் அதற்குரிய அடையாள அட்டையை வைத்திருந்தால்தான் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை நிலைமை
சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரோ ரயில்கள் இன்று அதிகாலையில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்கப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

மதுரை, கோவை திருச்சி
இது தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, நெல்லை, நகார்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுவதால் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். அவசியம் இல்லாமல் சுற்றுபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்த்துள்ளனர். மேலும் அபராதமும், வழக்குப்பதிவும் செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications