தேசிய நெடுஞ்சாலையில் வருது சூப்பர் மாற்றம்.. மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
சென்னை : இந்தியாவை பொறுத்தமட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மெல்ல மெல்லத்தான் அதிகமாகி வருகிறது. பேட்டரியில் உள்ள சார்ஜ் தீர்ந்துவிட்டால் அதனை மீண்டும் ஏற்றுவதற்கு சார்ஜிங் நிலையங்கள் இருக்குமா? என்ற பயம் காரணமாகவே பலர் இன்னமும் அந்த வாகனங்களை வாங்குவதற்கு தயங்குகிறார்கள்.இந்நிலையில் 'சார்ஜிங்', பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெற வசதியாக நெடுஞ்சாலை ஓரங்களில் மின்சார வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த முனையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மின்சார வாகனங்கள் வெளிநாடுகளில் எல்லாம் சக்கை போடு போடுகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் நகரங்களில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.ஆனால் கிராமங்களில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அந்த அளவிற்கு இன்னமும் அதிகரிக்கவில்லை.

ஏனெனில் பேட்டரியில் உள்ள சார்ஜ் தீர்ந்துவிட்டால் அதனை மீண்டும் ஏற்றுவதற்கு சார்ஜிங் நிலையங்கள் இருக்குமா? என்ற பயம் கிராமங்களில் மின்சார வாகனங்களை வாங்குபவர்கள் மத்தியில் உள்ளது. அவர்களின் பயத்திற்கு விதை போடும் வகையில் தான் இந்திய சாலைகள் உள்ளன. ஏனெனில் பல இடங்களில் இன்னமும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜரிங் வசதி மற்றும் பழுது பார்க்கும் மையங்களின் வசதி அதிகமாக இல்லை.. பலருக்கும் மின்சார வாகனங்களை பழுதுபார்ப்பதில் நிறைய அனுபவம் இல்லை.. மிக குறைந்த மையங்களே உள்ளன. குறைவான நபர்களே உள்ளார்கள்.
இதையடுத்து, மின்சார வாகனங்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்கவும், நிகழ்நேர அடிப்படையில் மின்சார வாகனங்களை பழுது பார்த்தல் உள்ளிட்ட முக்கிய சேவைகளை வழங்குவதற்காகவும் நெடுஞ்சாலை ஓரங்களில் வாகன உற்பத்தியாளர்கள், தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்து கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட உள்ள கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை மையங்கள் மின்சார வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறை நிவர்த்தி செய்தல், அன்றாட பராமரிப்பு பணிகள் செய்தல், சார்ஜிங் ஏற்றுவதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒருங்கிணைந்த முனையமாக செயல்பட போகிறது.
இந்த முனையங்களை எவ்வளவு தூர இடைவெளியில் அமைப்பது, அதற்கான விதிமுறைகளை எப்படி வகுப்பது? என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தற்போது டெல்லி-மும்பை இடையே 1,300 கிலோ மீட்டர் நீள அதிவிரைவு சாலைக்கான பணிகள் நடந்து வருகிறது.
இதற்கான பணிகள் நிறைவடைந்ததும் முதலாவதாக அங்கு மின்சார வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த முனையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது இதனைத்தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்பட உள்ளது. மின்சார வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த முனையங்கள் வாகன ஓட்டிகள் எந்தவித அச்சமும் இன்றி நீண்டதூரம் செல்ல உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications