மெட்ரோ ரயிலில் ஒலிக்கும் ஹஸ்கி வாய்ஸ்! அட, அவரா இது? இவர் யார் தெரியுமா?
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒலிக்கும் பலருக்கும் பரிச்சயமான அந்த குரலுக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா? அவர் எப்படி இருப்பார் எனத் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பலருக்கும் இவரை தெரிந்திருக்கும். ஆனால், அவர் யார்? எப்படி இருப்பார் என்பது தெரிந்திருக்காது. 'அடுத்த நிறுத்தம் ஆலந்தூர் மெட்ரோ' என இவர் ஹஸ்கி வாய்சில் பேசுவதைக் கேட்ட பல லட்சக் கணக்கானவர்கள் அவரது குரலுக்கு அடிமையாகி இருப்பார்கள். இந்தக் குரலைப் பலரும் ஏதோ கூகுள் வாய்ஸ் என்று கூட நம்பி இருப்பார்கள். ஆனால், அதைப் பேசியவர் அச்சு அசல் ஒரு பெண்தான். அவர் பெயர் தேவசேனா. இந்த மெட்ரோ அறிவிப்பு மட்டும் இல்லாமல் பல விளம்பரங்களில் இவரது குரல் பின்னணியில் ஒலித்திருக்கிறது.

இவர் யார்? எப்படி இந்த மெட்ரோ குரல் பதிவுக்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது? அதைப் பற்றிய தகவல்களைப் பின்னணி குரல் கலைஞர் தேவசேனா ஒரு பேட்டியில் விளக்கி இருக்கிறார். அவர், "ஒருமுறை என்.எப்.டி.சியில் இருந்து அழைப்பு வந்தது. ராமு என்பவர் வழியாக அந்த வாய்ப்பு வந்தது. மெட்ரோ ரயில் அறிவிப்புகாகப் பேச வேண்டும். விருப்பம் உள்ளதா? என்று கேட்டார். இது ஒரு பெருமையான விசயம். உடனே நான் அதை ஏற்றுக்கொண்டேன்.
கடந்த 2014லேயே முழு ஸ்கிரிப்ட் கொடுத்துவிட்டார்கள். அப்போது மெட்ரோ பணிகள் தொடங்கவே இல்லை. அப்போதே டப்பிங் செய்து கொடுத்துவிட்டோம். ஆனால், அது வருமா? வராதா? என்பதில் உறுதியாகவில்லை. சில ஆண்டுகள் கழித்து மெட்ரோ ரயில் இயங்க தொடங்கியது. அதில் பயணித்த என் நண்பர்கள் 'உன் குரல் மெட்ரோவில் அறிவிப்புப் பலகையில் ஒலிக்கிறது' என்று சொன்னார்கள். அதன்பிறகு நான் மெட்ரோ ரயிலில் பயணித்தேன். என் குரல்தான் என்பது உறுதியானது. அதுவே மிகப்பெரிய ஆச்சரியம்" என்கிறார்.
முதற்கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயங்க தொடங்கிய பிறகு இப்போது பல புதிய வழித்தடங்களில் மெட்ரோ இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில்கூட இவரது குரலைத்தான் பதிவு செய்துள்ளனர். ஒரு வழித்தடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பூர்வாங்க வேலைகளை அதிகாரிகள் நிறைவு செய்துவிடுவார்கள் என்கிறார் தேவசேனா.
மெட்ரோ ரயில் நிற்கும் நிலையங்களுக்கான அறிவிப்புகளைத் தாண்டி பல பொது அறிவிப்புகளிலும் இவரது குரலையே மெட்ரோ பயன்படுத்தி இருக்கிறது. ஆக, சென்னை மெட்ரோ உள்ளவரை இவரது குரலை மக்கள் மறக்காமல் கேட்கலாம். ஒரு காலகட்டத்திற்குப் பின் நவீன நடைமுறைகள் அமலுக்கு வந்தாலும் முதன் முதலாக சென்னை மெட்ரோவில் ஒலித்த குரல் என ஒரு தலைமுறை இவரது குரலை ஆல் இண்டியா ரோடியோ சரோஜ் நாராயண ஸ்வாமி குரலைப் போன்று காலம் கடந்து நினைவுக் கூறுவார்கள்.
இவர் எப்போது இந்த டப்பிங் துறைக்குள் வந்தார்? முதல் அறிமுகம் எப்படி? அதை பற்றி பேசிய தேவசேனா, "1997 ஆம் ஆண்டு சென்னைக்கு முதன்முதலாக பீட்சா நிறுவனம் ஒன்று வந்தது. அந்தக் கார்ப்பரேட் கம்பெனியின் கால் சென்டரில் வேலைக்குச் சேர்ந்தேன். பலர் அதற்கு முயற்சி செய்தார்கள். நான் தான் 'பீட்சா' என சரியாக உச்சரித்தேன். அப்போது அந்த வார்த்தை புழக்கத்திற்கு வரவில்லை. தொடக்கக் காலத்தில் பலரும் சரியாக உச்சரிக்க மாட்டார்கள். என் குரலைக் கேட்ட அதிகாரிகள் 'நீங்கள்தான் சரியாக பீட்சா என்று உச்சரிக்கிறீர்கள். ஆகவே உங்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறோம்' என்றார்கள். அப்படித்தான் என் பயணம் தொடங்கியது. அங்கிருந்து சில விளம்பரங்கள் செய்தேன். அதன் மூலம் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகப் பயணம் தொடங்கியது" என்கிறார்.
இவருக்கு என்னதான் பீட்சா பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்தாலும் இவருக்கு அவரது தலைமை அதிகாரிக்கு செட் ஆகாமல் வேறு வேலை தேடி இருக்கிறார். அப்போது ரோடியோவில் ஆர்ஜே பயிற்சிக்கு ஒரு விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அதில் சேர கட்டணம். இவரிடம் அந்தத் தொகை இல்லை, வீட்டில் அம்மா தபால் அலுவலகத்தில் போட்டு வைத்த 11 ஆயிரத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார். அதன் மூலம் அந்தப் பயிற்சிப் பட்டறையில் சேர்ந்து முறையாக அனுபவம் பெற்றுள்ளார். இன்று அந்தப் பயிற்சி அவரை சென்னை மெட்ரோ அளவுக்கு ஒரு கவுரவமான இடத்திற்கு இட்டு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications