சத்தமேயில்லாமல்.. கர்நாடகா கட்டிய திடீர் அணை.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. 5 மாவட்ட விவசாயிகள் கதி?
சென்னை: கர்நாடக மாநிலம் கட்டியுள்ள புதிய அணையால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களுக்கு பாதிப்பு உறுதி என்கிறார்கள், வல்லுநர்கள்.
தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் நந்தி மலையில் இருந்து உற்பத்தியாகி ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழியாக சென்று கடலில் கலக்கிறது.
Recommended Video
இதனால், தமிழகத்தின், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மாகாண ஒப்பந்தம்
1892 ஆம் ஆண்டின் மைசூரு-மெட்ராஸ் மாகாண அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆற்றுப் பகுதிக்கு மேல் உள்ள மாநிலங்கள் ஆற்றுப் பகுதியில் உள்ள மாநிலங்களில் அனுமதியை பெறாமல் நீரைத் தேக்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்த கூடாது. ஆனால் இதை மீறி கர்நாடக அரசு ஆற்று நீரை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டதுடன், தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டது.

பேச்சு வார்த்தைகள்
இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு எதிராக வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய ஜல் சக்தி துறையுடன் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மத்திய ஜல் சக்தி அமைச்சகம், இதுபற்றி பேசி தீர்வு ஏற்படுத்த மத்திய நீர்வள குழுமத் தலைவர் தலைமையில் குழு 2020ல் அமைக்கப்பட்டு புதுதில்லியில் பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கோலாருக்கு தண்ணீர் தேவை
அப்போது கர்நாடக மாநில அரசின் சார்பில் கோலார், பங்காருபேட்டை மற்றும் 45 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மட்டுமே இந்த அணை கட்டப்படுவதாக தகவல் தெரிவித்தது. மேலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா முதல் அலை ஊரடங்கு மற்றும் தமிழகத்தின் தேர்தல் போன்ற தொடர் நிகழ்வுகள் காரணமாக குழுக்கூட்டம் நடை பெறாமல் இருந்தது.

திடீரென கட்டிய அணை
மேலும் கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு உள்ளிட்ட நடை முறைகளை பயன்படுத்தி சத்தமில்லாமல், தமிழகத்தின் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் யார்கொள் என்ற கர்நாடக மாநில வனப்பகுதியில் இந்த அணையை கர்நாடக மாநில அரசு கட்டி முடித்து உள்ளது. இந்த அணையின் நீளம் 430 மீட்டர் அளவிலும், உயரம் 50 மீட்டர் அளவிலும் அமைந்துள்ளது.

உபரி நீர்தான் வரும்
எனவே இனி தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் நீர் இந்த அணையின் உடைய முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய பின்பு மீதமுள்ள உபரி நீரை தமிழகத்திற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் ஓசூர் கெலவரப்பள்ளி அணை கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் சாத்தனூர் அணை ஆகிய அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து முற்றிலுமாக தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

துரைமுருகன் கருத்து
இதனால், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, தென்பெண்ணையின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டிய பிரச்னைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications