தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக அமைகிறது கூட்டணி ஆட்சி!
சென்னை: தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெகவுடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பல்வேறு யூகங்களும் குழப்பங்களும் தொடர்ந்து நீடித்து வந்தன. இந்த நிலையில், ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் விஜய். நாளை காலை 11 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில், விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கூட்டணி ஆட்சி
தவெகவுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு உண்டு என்று கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தற்போது காங்கிரஸுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க அக்கட்சிக்குள் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலை சிறுத்தைகளும் ஆட்சியில் பங்கு கேட்கிறது. எனவே துணை முதல்வராக திருமாவளவன் பதவியேற்க வாய்ப்பு அதிகம்.
முதல்முறை
இதன் மூலம், தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி என்ற புதிய வரலாறு உருவாக்கப்படும். இதில் தவெக கட்சிக்கும் விஜய்க்கும் மிக முக்கிய பங்கு இருக்கும். அது மட்டுமின்றி சுமார் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறும் சூழல் உருவாகி உள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.
இந்தியாவில் கூட்டணி ஆட்சி
1977ல் முதல் முறையாக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது. 1989 முதல் 2014 வரை மத்தியில் கூட்டணி இன்றி ஆட்சியே நடக்கவில்லை. 1952 முதற்கொண்டே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது, ஆனால் தற்போது அது நிஜமாகப்போகிறது.












Click it and Unblock the Notifications