சென்னை அண்ணா மேம்பாலம் அருகே! ரூ. 1000 கோடி மதிப்பு நிலத்தை கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதிட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி 'தோட்டக்கலைச் சங்கம்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார்.

இதை மீட்க கடந்த 1989-ஆம் ஆண்டே அரசு எடுத்தது. நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என உறுதி செய்தது. பின்னர், அங்கு அமைந்திருந்த டிரைவ் இன் உணவு விடுதி அனுபவித்த 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழி பூங்கா அமைத்தது.
அந்த நிலத்திற்கு எதிரில் 6.36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் வருவாய்த் துறை அந்த இடத்தை கையகப்படுத்தி தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைத்துவிட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதில் வருவாய்த் துறை கையகப்படுத்திய நடவடிக்கைகளில் விதிமுறை மீறல் உள்ளதாகவும்,உரிய நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. முறையான நடவடிக்கை பின்பற்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்தை தன்வசமே ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.இடைக்காலமாக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன் ,இடையீட்டு மனுதாரர் வழக்கறிஞர் புவனேஷ்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்று கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications