எதிர்க்கட்சி தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமி.. துணை தலைவர் பதவி.. ஓபிஎஸ்க்கு கிடைப்பதில் சிக்கல்
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். ஆனால் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி ஓபிஎஸ்க்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பதவிக்கு அதிமுகவில் மேலும் சில முக்கிய தலைவர்கள் விரும்புவதாக சொல்லப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களில் வென்றுள்ளது.
ஆனால் அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 65 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிக இடங்களில் வென்றுள்ளது.

2வது பெரிய கட்சி
இந்த தேர்தலில் மேற்கு மாவட்டங்களிலும், வடக்கு மாவட்டங்களிலும் அதிமுகவிற்கு கணிசமாக வெற்றி கிடைத்துள்ளது. அதனால் 65 இடங்களை அதிமுக கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் அதிமுக சட்டசபையில் 2வது பெரிய கட்சியாகவும் பலமான எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதையடுத்து அதிமுகவிற்கு தமிழக சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வழங்கப்படும். இது கிட்டத்தட்ட அமைச்சர் பதவிக்கு சமமானது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது,

ஓபிஎஸ்க்கு சிக்கல்
ஏனெனில் இப்போது வெற்றி பெற்றுள்ள பலர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ பன்னீர்செல்வம் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த பதவியை பிடிக்க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

வாழ்த்து பெற்ற எம்எல்ஏக்கள்
இதனிடையே டெல்டா, சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் தோற்றதால் சோகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலைநகர் இல்லத்தில் இருக்கிறாராம். அவர் யாரையும் சந்திக்க விரும்பவில்லையாம். சேலம் மாவட்டத்தில் எம்எல்ஏவாக தேர்வான அதிமுகவினர் 7 பேர், பாமகவினர் 2 பேர் சந்திக்க முயன்ற நிலையில் முதலில் அவர்களை திருப்பி அனுப்பிய அவர், பின்னர் தனித்தனியாக அழைத்து சந்தித்தாராம். அப்போது 9 பேரும் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications