பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க பதிவு! விளக்கம் கேட்ட செய்தியாளர்கள்! பதறி அடித்து ஓடிய ஆ.ராசா
சென்னை: தவெக அமைச்சரவையில் விசிகவும், ஐயூஎம்எல் கட்சியும் இணைந்ததை ஆபாசமாக விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தமிழில்தானே இருக்கிறது, பிறகு என்ன என கேட்ட திமுக எம்பி ஆ.ராசா காரில் ஏறி வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். அதாவது பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் ஒரு சொற்றொடரை பயன்படுத்தியிருந்தது பல்வேறு கண்டனங்களுக்குள்ளாகியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்த விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு கொடுத்தனர். எனினும் அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம், திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்களை இணைக்க விஜய் ஆசைப்பட்டார். இதற்கு கம்யூனிஸ்ட்கள் மறுத்துவிட்ட நிலையில் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டனர்.
ஏற்கெனவே திமுகவுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் கூட்டணியை விட்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வகையில் விசிகவையும் ஐயூஎம்எல் கட்சியையும் திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் விமர்சித்துவிட்டு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த பதிவை நீக்கிவிட்டார்.
முன் "ஏற" தரப்பட்ட ஏணியும், மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும் வெறும் விசில் சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்... என்று கூறி அதன் பிறகு பெண்களை அவமதிக்கும் வகையில் இரு வரிகளை ராசா கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு விசிகவின் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி கண்டனம் தெரிவித்திருந்தார். தனது பதிவில், அதிகாரம் எளியவர்க்கு
அதிலென்ன ஆத்திரம்
ஆற்றாமையால் அள்ளிவீசும்
அவதூறுகள் அசைத்திடாது
அமைதியாய் கடப்பது
அநாகரீகம் தவிர்க்கவே.
அநீதி தொடர்ந்து
அனைத்தும் உரைத்தால்
அணைக்க முடியா
அனலில் தகித்து போவீர்! என கடுமையாக எச்சரித்திருந்தார்.
அது போல் பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது: உண்மையில் சமீப கால தமிழக அரசியல் வரலாற்றில் "பூ முடித்தவனை புறந்தள்ளி- புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை" என்று ஆ. ராஜா வை போல் பெண்களை இவ்வளவு ஆபாசமாக, அநாகரீகமாக விமர்சனம் செய்தவர்கள் யாரும் இல்லை. தான் செய்த குற்றத்திற்கு ஆ.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தமிழக காவல் துறை ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.
அது போல் இந்த பதிவுக்கு பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எல்லோரும் மதிக்கும் தலைவராக இருக்கும் திருமாவளவனை பார்த்து அப்படி ஒரு பதிவை ஆ.ராசா எப்படி போட்டார். பெண்களை இழிவுப்படுத்தி அவர் போட்ட பதிவுக்கு திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது போல் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவிப்பாரா என ஆதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னியரசுக்கும், ஷாஜஹானுக்கும்எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பலரது கண்டனங்களை தொடர்ந்து ஆ.ராசா தனது பதிவை நீக்கிவிட்டார். இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்த அவரை செய்தியாளர்கள் "பெண்கள் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளீர்களே, அதற்கு என்ன அர்த்தம்" என கேட்டதற்கு நான் பதிவிட்டது தமிழில் தானே இருக்கிறது. அனைவருக்கும் புரியும் என கூறிவிட்டு காரில் வேகமாகச் சென்றுவிட்டார் ஆ.ராசா!












Click it and Unblock the Notifications