சென்னை புறநகரில் ரவுடிகளை வேட்டையாட.. களமிறக்கப்பட்டார் "என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்" வெள்ளத்துரை!
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை ஒடுக்குவதற்காக என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து, கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை என சட்டவிரோத செயல்கள் உச்சத்தில் இருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் தாதாக்களிடையே மோதல்களால் கொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.

டார்கெட் மாணவர்கள்
இப்பகுதிகளின் பல்கலைக் கழகங்களின் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருள் கும்பல் இயங்கி வருகிறது. சில பல்கலைக் கழக மாணவர் விடுதிகளையே இந்த கும்பல் ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்டம் போட்டும் வருகிறது. தங்களை போலீசார் எதுவும் செய்ய முடியாது என வலம் வருகின்றன இந்த கும்பல்கள்.

அரசியலும் ரவுடிகளும்
சென்னை புறநகர்களில் படப்பை குணா, சூர்யா என தாதாக்கள் ஆட்டம் தொடரவே செய்கிறது. ரவுடி சூர்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார். ரவுடி சூர்யா மீதான அச்சத்தால் அவரது மனைவி ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக எந்த எதிர்ப்பும் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார். சூர்யாவின் மனைவி பதவி ஏற்பதற்கு முன்னதாக போலீசார் அவரை கைதும் செய்தனர். இப்படி அரசியல் தஞ்சமடைந்த ரவுடிகளும் அப்பகுதிகளில் உள்ளனர்.

களமிறக்கப்பட்ட வெள்ளத்துரை
இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை ஒடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்துரை சப் இன்ஸ்பெக்ட்ராக இருந்த காலத்தில்தான் சென்னையை நடுநடுங்க வைத்த தாதா அயோத்தியா குப்பம் வீரமணி, சென்னை மெரினா கடற்கரையில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை முன்வைத்து பல திரைப்படங்களில் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

காஞ்சியில் தஞ்சமடைந்த ரவுடிகள்
தற்போது திருவண்ணாமலை கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார் வெள்ளத்துரை. அவருக்கு கூடுதல் பொறுப்பாக சென்னை புறநகர் ரவுடிகளை ஒடுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வலம் வந்த பல ரவுடிகளும் தாதாக்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தமிழகத்தின் பல இடங்களில் நிகழும் படுகொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை அனுப்பி வருவதும் இந்த தாதாக்கள்தான். ரவுடிகள், தாதாக்களின் இந்த அட்டூழியங்களுக்கு முடிவு கட்டவே ஏடிஎஸ்பி வெள்ளத்துரை களமிறக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications