இப்படி ஒரு ரூட்டா.. சென்னை டூ நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்.. இந்த வழித்தடத்தில் இதுவே முதல் முறை
சென்னை: சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை சென்ட்ரல் - ஆவடி & நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு ஆவடி, அரக்கோணம் வரை சென்று அதன்பிறகு காஞ்சிபுரம் வழியாக, செங்கல்பட்டு வந்து, பின்னர் வழக்கம் போல் விழுப்புரம், திருச்சி வழியாக செல்லும்.
பொதுவாக சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, தமிழ் புத்தாண்டு போன்ற சமயங்களில் சென்னையில் வேலை செய்யும் வெளியூர் மக்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னையில் வேலை செய்யும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் , பண்டிகைக் காலங்கள், தொடர் விடுமுறைக் காலங்களில் இவர்கள் சொந்த ஊருக்கு மொத்தமாக சென்று, பின்னர் அதேவேகத்தில் மொத்தமாக திரும்பி வருகிறார்கள்.

இப்படி பெருமளவு மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல விரும்புவது ரயிலில்தான். ரயில் தான் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் உடல்நலம் பாதித்தவர்களுக்கு விருப்பமான பயணமாக இருக்கிறது. ஆனால் ரயிலில் செல்ல டிக்கெட் கிடைப்பத என்பது சவாலானது. முக்கியமான நாட்களில் ரயில் டிக்கெட் கட்டணம் 120 நாட்களுக்கு முன்பே தீர்ந்துவிடும். வார இறுதி நாட்களில் ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 90 நாட்களுக்கு முன்பு முயற்சி செய்தால் தான் சாத்தியம். அதிலும் கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலிலோ அல்லது மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே டிக்கெட் எடுப்பது, காளை மாட்டில் பால் கறப்பதற்கு சமம். அவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைக்காது.
இப்படியான சூழலில் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் பயணிகள் நலன் கருதி இது போன்ற தொடர் விடுமுறை சமயங்களில் தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ரயில் எப்படி இருக்கும் என்றால், பண்டிகைக்கு முதல் நாள் அல்லது அதற்கு முதல் நாள் கிளம்பும் வகையில் இருக்கும். அப்படித்தான் சுதந்திர தினத்தையொட்டி நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதுமே பொதுவிடுமுறையாகும். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் , சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பலரும் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக உள்ளனர்.
அப்படி ஆர்வமாக உள்ளவர்களுக்காக சிறப்பு ரயில் சென்னைசென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 14ம் தேதியான நாளை இரவு 11.30க்கு புறப்படுகிறது. இந்த ரயில் ஆவடி,அரக்கோணம் வழியாக பயணித்து காஞ்சிபுரம் வருகிறது. அதன்பிறகு செங்கல்பட்டு வருகிறது. அப்புறம் வழக்கம் போல் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, நாகர்கோவில் என செல்கிறது.
இதேபோல் மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பிற்பகல் 3.50க்கு புறப்பட்டு, வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக ஆவடி ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 16ம் தேதி அதிகாலை 5.10க்கு வந்து சேருகிறது.
இந்த ரயில் தவிர செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (13ஆம் தேதி) மற்றும் 18ஆம் தேதிகளில் திருநெல்வேலியிலிருந்தும், நாளை 14ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதிகளில் செங்கல்பட்டிலிருந்தும் சுதந்திர தின சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
செங்கல்பட்டில் மாலை 5.55 மணிக்குப் புறப்படும் ரயில் (06019) பண்ருட்டிக்கு இரவு 8.05 மணிக்கு வந்து சேருவதோடு, திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 5.50 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இரவு 10.50 மணிக்குப் புறப்படும் ரயில் (06020) மறுநாள் காலை 7:40 மணிக்கு பண்ருட்டியையும், காலை 11 மணிக்கு செங்கல்பட்டும் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications