சிரிஞ்ச் மூலம் ரத்தத்தை எடுத்த காதலன்.. ஒரு ஊசி மாற்றிய அந்த நிமிடம்! ஹைதராபாத்தை உலுக்கிய அதிர்ச்சி
சென்னை: இது ஹைதராபாத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் ஆகும்.. ஒரு காதல் மறுப்பால் தொடங்கிய கோபம், இறுதியில் கொடூர பழிவாங்கலாக மாறியிருக்கிறது.. எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி செயல் வெளிச்சத்திற்கு வந்தது.. சிகிச்சை பெற்றும் மன உளைச்சலில் தவித்த இளம்பெண், சில வாரங்களில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் முழு மாநிலத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. என்னதான் நடந்தது?
ஹைதராபாத் அருகே உள்ள போச்சாரம் ஐடி காரிடார் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான மனோகர். இவர் பகுதிநேர டிரைவராகவும், டெலிவரி ஊழியராகவும் பணியாற்றி வந்தார். மனோகருக்கும் அவரது நெருங்கிய உறவுக்காரப் பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடித்திருந்தனர்.

ஹைதராபாத் குற்ற செய்தி
அப்போதுதான் மனோகரின் அப்பா எச்.ஐ.வி பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.. மனோகரின் அம்மாவுக்கும் அதே பாதிப்பு இருப்பதால், இளம்பெண்ணின் தந்தை சந்தேகம் அடைந்தார்.
அதனால் திருமணத்திற்கு முன்னதாக மனோகரை மெடிக்கல் செக்கப் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். அந்த பரிசோதனையில் மனோகருக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், திருமணத்தை உடனடியாக ரத்து செய்தனர்.
இது மனோகரனுக்கு கோபத்தை தந்தது.. தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த மனோகர், அந்தப் பெண்ணைப் பழிவாங்க ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினார். கடந்த மார்ச் 11-ம் தேதி, ஒரு மருத்துவமனையில் இருந்து சிரிஞ்ச் (Syringe) மற்றும் ஊசியை வாங்கிக்கொண்டு, அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்றார்.
சிரிஞ்ச் மூலம் ரத்தம்
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தான் கொண்டு வந்திருந்த சிரிஞ்ச் மூலம் தனது உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, அந்தப் பெண்ணின் உடலில் வலுக்கட்டாயமாக ஊசி மூலம் செலுத்தினார் மனோகர். "எனக்கு வந்த நோய் உனக்கும் வரட்டும், அப்போதுதான் நீ வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டாய், என்னைத் தான் மணம் முடிப்பாய்" என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அந்தப் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எச்.ஐ.வி தொற்று பரவாமல் தடுப்பதற்கான அவசர கால சிகிச்சைகள் (PEP - Post-Exposure Prophylaxis) வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போச்சாரம் ஐடி காரிடார் போலீசார் மனோகர் மீது கொலை முயற்சி (IPC 307) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மார்ச் 14-ம் தேதி அவரைக் கைது செய்தனர்.
காதலிக்கு ஊசி
சம்பவம் நடந்து சில வாரங்கள் ஆன நிலையில், அந்தப் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். சமூகத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் மற்றும் எச்.ஐ.வி பாதிப்பு குறித்த பயம் அவரை வாட்டியது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த அந்தப் பெண், ஏப்ரல் 10-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இப்போது மனோகர் ஜெயிலில் இருக்கும் நிலையில், பெண்ணின் தற்கொலையைத் தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட தீவிரப் பிரிவுகளின் கீழ் மாற்றியுள்ளனர். ஒருதலைக்காதல் மற்றும் வஞ்சக உணர்ச்சியால் ஒரு இளம்பெண்ணின் வாழ்வு இவ்வாறு அநியாயமாகப் பறிபோனது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications