சென்னை அருகே இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட கோயில்.. 46 வருடம் ஆனாலும்.. அறிய வேண்டிய மேஜர் விஷயம்
சென்னை: சென்னையை அடுத்த திருவள்ளுர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் என்ன கிராமத்தில் கிருஷ்ணன் கோயில் அமைந்திருந்தது. இந்த கோயில் கடந்த 1979ம் ஆண்டு அமைக்கப்பட்ட கோயில் ஆகும். இந்த கோயில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோயிலை இடிக்க உத்தரவிட்டது. இதன்பேரில் வருவாய் அதிகாரிகள் இன்று கோயிலை அகற்றினார்கள். அப்போது தான் பரபரப்பான சம்பவம் நடந்தது.
பொதுவாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்போர், சாலைகளை ஆக்கிரமித்து குடியிருப்போர், நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்போருக்கு என்றைக்குமே சிக்கல் தான். 40 வருடம் குடியிருந்தாலும் கண்டிப்பாக அந்த கட்டிடம் இடிக்கப்படும் என்பது உறுதி.. யாராவது நீதிமன்றத்தில் அரசு இடம் என்றோ, அல்லது நீர் நிலை அல்லது பாதை என்று வழக்கு தொடர்ந்தால், நீதிமன்றம் கண்டிப்பாக அதிரடியாக இடித்து அகற்றவே உத்தரவிட்டு வருகிறது.

நீதிமன்றங்களில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக எந்த வழக்கு சென்றாலும் கண்டிப்பாக ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீர்ப்புகள் வருகிறது. எனவே பலவருட ஆக்கிரமிப்பு, யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்று தவறான இடங்களை வாங்கிவிடாதீர்கள். சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே கோயில் ஒன்று சுமார் 45 வருடங்கள் கழித்து இடித்து அகற்றப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே உள்ளது புல்லரம்பாக்கம் கிராமம். அங்கு கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1979 -ம் ஆண்டு ருக்மணி சத்தியபாமா சமேத சந்தன கோபால கிருஷ்ண, சந்தன விநாயகர் என்ற பெயரில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டது. இக்கோயில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 46 வருடங்கள் ஆன நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர், கோயில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ருக்மணி சத்தியபாமா சமேத சந்தன கோபால கிருஷ்ண சந்தன விநாயகர் கோயிலை அகற்ற வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த நவம்பரில் திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை அகற்ற சென்றார்கள் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்போது அதிகாரிகளால் சுற்றுச்சுவரை மட்டுமே இடிக்க முடிந்தது. அதேநேரம், கோயிலை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர் வருவாய்த் துறையினர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் , உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அரசு நிலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சந்தன கோபால கிருஷ்ணன் கோயிலை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, புல்லரம்பாக்கம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்த கிருஷ்ணன் கோயிலை அகற்ற முடிவு செய்த வருவாய்த் துறையினர் நேற்று இரவு போலீஸார் பாதுகாப்புடன் கோயிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி மற்றும் விநாயகர் சிலைகளை அகற்றி, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தார்கள். இதற்கு புல்லரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் போலீஸாரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே திரும்ப சென்ற, திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையிலான வருவாய்த் துறையினர் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் வந்தனர். பின்னர் கோயிலை சுற்றி தடுப்புகளை வைத்து 3 பொக்லைன்கள் மூலம் கோயிலை அதிரடியாக அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த இருவர் திடீரென தங்களது உடல்களில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்கள்.
இதையடுத்து உடனடியாக ஓடிச்சென்ற போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, அவர்களை புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசு நிலத்தில் கோயில், வீடு என எது இருந்தாலும், குறிப்பாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால், அது எத்தனை வருடம் ஆகி இருந்தாலும் இடிக்கப்படலாம் என்பதே இன்றைய சம்பவம் தரும் எடுத்துக்காட்டாகும்.












Click it and Unblock the Notifications