நண்பன் ஒருவன் வந்த பிறகு.. விண்ணை தொடலாம் உந்தன் சிறகு! முதலமைச்சரின் உற்ற தோழன் அன்பில் பொய்யாமொழி!
சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நாளை 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அவரது உற்ற நண்பரான அன்பில் பொய்யாமொழியின் 24-ம் ஆண்டு நினைவுநாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
திமுகவின் மூத்த முன்னோடியான அன்பில் தர்மலிங்கம் குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள நட்பானது தலைமுறைகளை கடந்தது. அந்த வகையில் அன்பில் பொய்யாமொழிக்கும், மு.க.ஸ்டாலினுக்குமான நட்பை திமுகவினர் அனைவரும் அறிவர். குடும்பம், கட்சி, அரசியல், என பலவற்றையும் ஒளிவுமறைவின்றி மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருவருடைய நட்பு திகழ்ந்தது.

அன்பில் பொய்யாமொழியை பொறுத்தவரை இளைஞரணியில் இருந்தவர் என்பதால் கரைவேட்டியை காட்டிலும் ஒயிட் பேண்ட் அணிந்து பளிச்சென்று காணப்படுவார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள இல்லத்திற்கு தன்னை சந்திக்க வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று, அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வு பெற்றுக் கொடுக்க முயலக் கூடியவர்.
கட்சி -ஆட்சி என பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்துகொள்ளக் கூடியவர் அன்பில் பொய்யாமொழி என பழைய நினைவலைகளை பகிர்கின்றனர் அவரை நன்கு அறிந்த திருச்சிக்காரர்கள்.
அன்பில் பொய்யாமொழியின் பலம் என்னவென்றால், அவரது புன்னகை மாறாத முகம் தான். சிடு சிடு வென்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எப்போதும் புன்னகை மன்னனாக திருச்சியில் வலம் வந்தார். குறிப்பாக நூற்றுக்கணக்கான இளைஞர்களை கட்சியிலும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி கை தூக்கிவிட்டு உதவியவர் எனக் கூறுகிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்ட போது அதன் வளர்ச்சிக்காக ஊர் ஊராக மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருடன் அந்தப் பயணங்களில் பங்கெடுத்தவர் அன்பில் பொய்யாமொழி. தந்தை அமைச்சராக இருந்தும், மு.க.ஸ்டாலினுடன் தனக்கு மிக நெருங்கிய நட்பு இருந்தும் தனக்கென்றோ, தனது வாரிசுகளுக்கென்றோ பெரிதாக எந்தச் சொத்தும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர்.
அன்பில் பொய்யாமொழி மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் திமுகவில் மிக முக்கிய பொறுப்பில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்திருப்பார். தனக்கு எத்தனை பணிகள் இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு ஆண்டுதோறும் தந்தையின் நினைவு நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று திருச்சி கிராப்பட்டி இல்லத்தில் அன்பில் பொய்யாமொழி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தவறமாட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.












Click it and Unblock the Notifications