கண் முன்னே இடித்து தள்ளப்பட்ட வீடு.. கதறி அழுத பெண்.. சென்னை பல்லாவரத்தில் இடிக்கப்பட்ட 700 வீடுகள்
சென்னை: சென்னை பல்லாவரம் அருகில் அடையாற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்துள்ளது தமிழ்நாடு அரசு. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஒரு பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து 700 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்தார்கள். இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பிறகு நீர் நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றமும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித சமரசமும் இன்றி அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர் பாய்ந்தோடும் அடையாறு ஆற்றின் கரையோரம் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே இரண்டு முறை வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றிய நிலையில் 3வது முறையாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள டோபிகானா தெருவில் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகளை பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் எதிர்ப்புகளை மீறி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள்.இதனிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த அப்பகுதி பெண் ஒருவர், தான் பல வருடமாக குடியிருந்த வீடு கண் முன்னே இடித்து தள்ளப்படுகிறதே என்று கதறி அழுதார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்து வரும் சில நெட்டிசன்கள், சென்னையில் பல தனியார் கல்லூரிகளும் மருத்துவமனைகளும் ஆறுகளையும் ஏரிகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் அகற்றாமல் ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிப்பது நியாயமா? என்று கேட்கிறார்கள்.
சென்னை பல்லாவரம் அருகில் அடையாற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்துள்ளது தமிழ்நாடு அரசு. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஒரு பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதார். pic.twitter.com/n9bxNd2QP2
— velmurugan (@velmurugantheni) November 7, 2023
இதேபோல் வணிக நிறுவனங்களை கோர்ட் சொல்லியும் இடிக்காத அரசு... கல்லூரி ஆக்கிரமிப்புகளை கோர்ட் சொல்லியும் அகற்ற பயப்படும் அரசு... ஏரிகள், சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து சீரழிப்பவர்களின் இடங்களை அழிக்ககா அரசு... ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிப்பது நியாயமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இதனிடையே அடையாற்று கரையோரம் இடிக்கப்படும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு அரசின் சார்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், அரசு வீடுகளை ஒதுக்கிய பின்னரே இடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications