சென்னையில் அதிர்ச்சி.. தனியார் கல்லூரி படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி பலி.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னை: சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் படிக்கட்டில் தவறி விழுந்ததில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சமீப நாட்களாக கல்வி வளாக மரணங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே உயிரிழ்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனவு
சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதி சுனில் சர்மா மற்றும் சீமா ஷர்மா. சுனில் சர்மா மிண்ட் தெருவில் சொந்தமாக மருந்தகம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளை வங்கி சார்ந்த பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று சுனிலுக்கு மிகுந்த ஆசை. இதனால் மகளை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க வைத்துள்ளார். மாணவி மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கல்லூரியின் முதல் நாள்
கல்லூரியின் முதல் நாளான இன்று மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் காலை 8 மணி வகுப்பிற்கு செல்ல தாமதமாகியுள்ளது. இதனால் நான்காவது மாடியில் உள்ள தனது வகுப்பிற்கு மாணவி வேகமாக படிக்கட்டில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது. வேகமாக ஏறி சென்ற மாணவி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் வகுப்புகள் தொடங்கிவிட்ட காரணத்தினால் யாரும் வெளியே இருக்கவில்லை.

மயங்கி கிடந்த மாணவி
இதனையடுத்து வகுப்பு முடித்துவிட்டு படியில் இறங்கி வந்த பேராசிரியை ஒருவர் மாணவி ஒருவர் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மாணவி கீழே விழுந்ததில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாக அதே இடத்தில் மயங்கி கீழே கிடந்துள்ளார். மயங்கி இருந்ததால் அவரால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக ஆசிரியர் மற்ற மாணவிகளை அழைத்துள்ளார்.

உயிரிழப்பு
மாணவிகள் மற்றும் இதர ஆசிரியர்களின் உதவியுடன் மயங்கி கிடந்த மாணவியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த வேப்பேரி போலீசார் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி சென்றனர். மேலும் மாணவி கீழே விழுந்ததால்தான் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமாக என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீப நாட்களாக கல்வி வளாக மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications