சென்னைக்கு பக்கத்தில் இப்படி ஒரு கொடுமை! இளம்பெண் கூட்டு பலாத்காரம்! போலீஸ் என நம்பவைத்து அட்டூழியம்
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ் எனக்கூறி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது தோழிகளுடன் இதே பகுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வழக்கம்போல தன்னுடைய அறைக்கு திரும்பி இருக்கிறார். அப்போது பைக்கில் இருவர் இவரை பின் தொடர்ந்துள்ளனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம்
பின்னர் தாங்கள் போலீஸ் என்று கூறிய அவர்கள், உங்கள் மீது சந்தேகம் இருக்கிறது என்றும் எனவே எங்களுடன் விசாரணைக்கு வர வேண்டும் எனவும் கூறி அழைத்திருக்கின்றனர். இதனை நம்பிய அப்பெண்ணும் அவர்களுடன் சென்றிருக்கிறார். ஆனால் பைக் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்திற்கு செல்லாமல் அதற்கு எதிர் திசையில் சென்றிருக்கிறது. உடனே அப்பெண் வண்டியை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றிருக்கின்றனர். இதனால் அப்பெண் அலறவே முட்புதர்கள் நிறைந்த மறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி அப்பெண்ணின் வாயை பொத்தி இவர்கள் தூக்கிச் சென்றிருக்கின்றனர். பின்னர் அப்பெண்ணை இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

புகார்
மேலும் அப்பெண்ணிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பெண் காவலன் செயலி மூலமாக புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அப்பெண் கூறியதை போல அந்த பகுதியில் யாரும் சுற்றித் திரிந்ததாக தெரியவில்லை. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை சோதனை செய்ததிலும் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் அப்பகுதியில் செல்லவில்லை என காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கைது
அதேபோல மருத்துவ பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதயைடுத்து அவரது கைப்பேசிக்கு வந்த அழைப்பை கொண்டு அவரது நண்பர்கள் ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 2 பேர் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வேறு ஏதேனும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? என்றும் சம்பவம் நடந்த நேரத்தில் இவர்கள் எங்கிருந்தார்கள் என செல்போன் அழைப்புகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

கோரிக்கை
சிப்காட் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கவில்லை என்றாலும் கூட பெண்களுக்கு இப்பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லையென்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இங்கு பணி செய்வதற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை என பல மாவட்டங்களிலிருந்து வெளி ஆட்கள் வருவதால் யார் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். எனவே சிசிடிவி கேமிராக்களை கட்டாயமாக்க வேண்டும் என்றும், காவல்துறையினரின் ரோந்தை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications