இருக்கிற பிரச்சினையில் இது வேறயா? தவெக கொடியுடன் சாலையில் சர்க்கஸ்! ட்யூக் புள்ளிங்கோவை தேடும் போலீஸ்
சென்னை: ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாதுனு இது வேறயா என்பது போல, நடிகர் விஜய்யின் கட்சிக் கொடியை டூவீலரில் கட்டிக் கொண்டு வீலிங் செய்யும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனங்களை பெற்றுள்ளது. ஹெல்மெட் இல்லாமல், நம்பர் ப்ளேட் இல்லாமல், நெடுஞ்சாலையில் சாகசம் செய்யும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே தற்போது வரை உள்ளது.

சென்னையில் முக்கிய சாலைகளான சென்னை மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இரவு நேரங்களில், பைக் சாகச பந்தயத்தில் இளைஞர்களை ஈடுபடுவதும் , இதனால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியுடன் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சாகசம் செய்தபடி சென்றார். மின்னல் வேகத்தில் சாலையில் முன் வீல்களை தூக்கியபடி சீறிப் பாய்ந்த பைக்கரால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கினர். மேலும் தனுஷின் கொடி படத்தின் மியூசிக்கை பின்னணி கோர்த்து அதனை ரீல்ஸ் ஆகவும், வெளியிட்டுள்ளார்.
அந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லாத நிலையில், ஹெல்மெட் அணியாத அந்த இளைஞர் அதிவேகமாக பயணித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை புரொமோட் செய்வதோடு, தானும் பேமஸ் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் அந்த இளைஞர் சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? எப்போது எடுக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் இல்லை.
இந்த நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தான வகையிலும் வாகனத்தை இயக்கிய அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் காவல்துறைக்கு எக்ஸ் வலைதளத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னை மட்டுமல்லாது பல இடங்களில் தற்போது மோட்டார் சைக்கிள் பந்தயங்களும் சாகசம் செய்து வாகனம் ஓட்டுவது போன்ற சம்பவங்களும் அரங்கேற தொடங்கியுள்ளன.
இவற்றை அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் உள்ள போலீசாரும் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே மாநாடு பிரச்சனை, கட்சிப் பெயர் சர்ச்சை, கட்சிக் கொடி விவகாரம் என பல்வேறு சர்ச்சைகளை நடிகர் விஜய் எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு சில இடங்களில் இது போல கட்சியினர் அத்துமீறுவதும் அவருக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். கட்சி ஆரம்பித்த புதிதிலேயே இப்படி என்றால் இன்னும் போகப்போக என்ன என்ன நடக்குமோ? என விஜய் எதிர்ப்பாளர்கள் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications