டெல்லி டூ சென்னை விமானம்.. நடுவானில் தூத்துக்குடி இசக்கியப்பன் செய்த செயல்.. அப்படியே உறைந்த பயணிகள்
சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் இளைஞர் ஒருவர் மது அருந்தியதை கண்ட பயணிகள் திடுக்கிட்டனர். இதையடுத்த விமான பணிப்பெண்கள் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விமானம் சென்னை வந்ததும், போலீசார் அவரை பிடித்து சென்றனர். அங்கு போலீசிடம் மன்னிப்பு கேட்டார்.
நம்மூர் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு அரசு பஸ்ஸிலோ ஆம்னி பஸ்ஸிலோ ஏறிக்கொண்டு செல்வார்கள். இடைவெளியில் பெப்சி பாட்டிலில் ஊற்றிக்கொண்டு சிலர் மது அருந்துவார்கள். முன்பெல்லாம் இது அசாதாரணமாகவும், அசிங்கமானதாகவும் பார்க்கப்பட்டது. இப்போது சர்வ சாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது.

ரயிலிலும் இதே நிலை தான். ரயில் பயணிகள் முன்பே சர்வ சாதாரணமாக மதுபாட்டில்களை திறந்து மது அருந்தும் நிகழ்வுகள் நடக்கிறது. அன் ரிசர்வ் பெட்டிகளில் முழு போதையில் பயணித்தபடி, கீழே விழுந்து கிடப்பார்கள்.. மதுவின் சீர்கேடுகள் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்நிலையில் பஸ், ரயில்களை தாண்டி விமானத்திலும் சேட்டையை ஆரம்பித்துள்ளார்கள். அதுவும் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இந்த சேட்டையை செய்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த பயணி.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்துக்கு இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகிறது. டவுன் பஸ்கள் போல் அடிக்கடி விமானங்கள் வந்து செல்லும் மிகவும் பிஸியான விமான நிலையமாக சென்னை விமான நிலையம் இருக்கிறது.
இந்நிலையில் அண்மையில் டெல்லியில் இருந்து 132 பயணிகளுடன் தனியார் நிறுவன விமானம் வந்து கொண்டு இருந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கியப்பன் (வயது 30) என்பவர் அந்த விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இசக்கியப்பன் விடுமுறையில் சொந்த ஊரான தூத்துக்குடி செல்வதற்காக சென்னை வி்மானத்தில் வந்து கொண்டிருந்தார்.
டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது இசக்கியப்பன் தன்னிடம் இருந்த மதுபாட்டிலை எடுத்து அதில் தண்ணீர் கலந்து குடிக்க தொடங்கிவிட்டார். ஆம்னி பஸ்களிலும், ரயில்களிலும் செய்வதை போல் சர்வ சாதாரணமாக பயணிகள் முன்பு குவார்ட்டர் பாட்டிலை எடுத்து குடிப்பதை பார்த்த சகப்பயணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி உடனடியாக விமானத்தில் இருந்த பணிப்பெண்களிடம் சகப்பயணிகள் புகார் செய்தனர். அவர்கள், இசக்கியப்பனிடம் இருந்த மது பாட்டிலை பறிமுதல் செய்தார்கள். மேலும் இதுபற்றி தலைமை விமானியிடம் புகார் செய்தனர். இந்த நிலையில் விமானம், சென்னையில் தரையிறங்கியதும், தயாராக இருந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள்ளேயே ஏறிச்சென்று பயணி இசக்கியப்பனை கீழே இறக்கி சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், தூத்துக்குடி இசக்கியப்பன் டெல்லியில் விமானத்தில் ஏறும்போதே மதுபாட்டிலுடன் ஏறியிருக்கிறார். பின்னர் சர்வ சாதாரணமாக தண்ணீரை ஊற்றி மது அருந்தியது தெரிய வந்தது. இசக்கியப்பன் தனது செயலுக்கு போலீசாரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவரை போலீசார் கடுமையாக எச்சரித்ததுடன், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, விசாரணைக்கு தேவைப்பட்டால் மீண்டும் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தார்கள். விமானங்களில் பயணிப்போர் தப்பித்தவறி இதுபோன்ற செயலை செய்துவிடாதீர்கள். அப்புறம் போலீஸ் உங்களை பிடித்து சிறையில் தள்ளிவிடும்..












Click it and Unblock the Notifications