இடுப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28 லட்சம்..கெத்தாக நடந்து வந்த வாலிபர்.. கொத்தாக தூக்கிய போலீசார்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இடுப்பில் துணியால் மறைத்து ரூ.28 லட்சம் கொண்டு வந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி வரை தளர்வில்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர்.

போலீசார் கண்காணிப்பு
ரயில்களில் மதுபாட்டிகள் கடத்தி வருவதை கண்டுபிடிப்பதற்காக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.

சோதனை நடத்தினர்
இந்த ரயிலில் வந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினார்கள். அந்த நபரின் பேச்சு முன்னுக்குபின் முரணாக இருந்தது. மேலும் அவரது உடல் மொழியும் சந்தேகம் அளிக்கக் கூடிய வகையில் இருந்தது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரிடம் முழுவதுமாக சோதனை நடத்தினார்கள்.

இடுப்பில் மறைத்து வைத்தார்
அந்த வாலிபரின் சட்டையை கழற்றி பார்த்தபோது அவர் இடுப்பில் கட்டுக்கட்டாக பணத்தை துணியால் சுற்றி வைத்திருப்பது தெரியவந்தது. அதில் ஒரு கட்டில் 200 எண்ணிக்கையில் 2,000 ரூபாய் என 7 கட்டுகள் இருந்தது. மொத்தம் அவர் ரூ.28 லட்சத்தை இடுப்பில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவர் ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த கோணகந்தியா சந்திரசேகர் ( 21) என்பதும் குண்டூரில் ஒரு நகைக்கடையில் வேலை செய்வதும் தெரியவந்தது.

போலீசார் விசராணை
சென்னையில் உள்ள ஒருவரிடம் அந்த பணத்தை கொடுக்க வந்ததாக அந்த வாலிபர் தெரிவித்தார். ஆனால் பணத்துக்குரிய உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். சந்திரசேகர் உண்மையிலேயே இந்த பணத்தை யாருக்கு கொடுக்க வந்தார்? இவருக்கு இவ்வளவு பணம் கிடைத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications