ஆதார் கார்டு + சிசிடிவி கேமரா கட்டாயம்.. டெல்லி போட்ட திடீர் உத்தரவு.. இனி நொடிக்கு நொடி மாறப்போது
சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் புது அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இதுகுறித்த முக்கிய அறிவிப்பும் வெளியாகி பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
பொதுவாக, அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை பயன்படுத்தி தங்களது வருகையைக் கட்டாயமாக காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்..

புகார்கள்: ஆனால், பெரும்பாலான மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த நடைமுறைகளை சரியாக கண்காணிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், மருத்துவர்கள், சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்று சிகிச்சைக்கு வரும் நோயாளிகளே குற்றம்சாட்டி வந்தனர்..
இதையடுத்து, கடந்த ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை, மருத்துவர்கள் வருகை பதிவை கணக்கீடு செய்து பார்க்கப்பட்டதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெரும்பாலான மருத்துவர்கள் காலை நேரங்களில் பணிக்கு சரியான நேரங்களில் வருவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம், ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.
அதில், "மருத்துவர்கள் பணிநேரத்தில் ஒரு நிமிடத்திற்கு தாமதமாக வந்தால் கூட, அது "ஆப்சென்ட்" ஆக கணக்கிடப்படும் என்றும், ஈட்டிய விடுப்பில் இருந்து அந்த நாட்கள் நடைமுறையில் உள்ள விதிகளின்படி கழித்துக் கொள்ளப்படும். வெளியே சென்றாலும் சம்பந்தப்பட்ட துறை தலைவர்களிடம் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால், அது விடுமுறையாகவே கருதப்படும் என்று கூறியிருந்தது.
புது உத்தரவு: என்எம்சி எனப்படும் தேசிய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்படி ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவேடு பின்பற்றப்படுகிறது என்றாலும், இந்த கண்டிப்பு உத்தரவானது, பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இப்போது விஷயம் என்னவென்றால், தேசிய மருத்துவ ஆணையம் புது அதிரடியை தற்போது பிறப்பித்திருக்கிறது.. அதன்படி, நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய மருத்துவப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

இமெயில் முகவரி: மருத்துவ கல்லூரிகளில் ஆதாருடன் கூடியபயோமெட்ரிக் வருகைப் பதிவு, மருத்துவ பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு பிரத்யேக இமெயில் முகவரிகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஆதார் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், மருத்துவப் பதிவேடு நடைமுறைகளுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவு, மருத்துவத்துறையின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications