ஆதார் மின் இணைப்பு விவகாரம்.. 91 லட்சம் பேரா.. பெரிய தில்லாலங்கடி வேலை.. வெளியான தகவல்
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரத்தில் வீட்டு உரிமையாளர்கள் 91 லட்சம் பேர் வாடகைதாரர் பிரிவில் இணைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் விவகாரத்தில் வீட்டு உரிமையாளர்கள் 91 லட்சம் பேர் மின் இணைப்புடன் வாடகைதாாரர்கள் பிரிவில் தங்களது ஆதார் எண்ணை இணைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சொத்தின் மீது ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்று கருதி இப்படி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. கடந்த ஆண்டு நவ.15-ம் தேதி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம் என்றும் நேரிலும் மின்சார வாரிய அலுவலகத்திலும் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

மின்வாரிய எண்
இதற்காக இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆதார் எண்ணை மின் வாரிய எண்ணுடன் இணைக்க டிச. 31-ம் தேதிகடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

ஆதார் எண்
ஆனால், பெரும்பாலான மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைக்காததால், அவர்களின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இறுதியில் பிப். 28-ம் தேதியுடன் இந்த காலக்கெடு நிறைவடைந்தது. 2 கோடிக்கும் அதிகமானோர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள்
இந்நிலையில், வீட்டு உரிமையாளர்கள் 91 லட்சம் பேர் தங்களை வாடகைதாரர்கள் என்றுகூறி, வாடகைதாரர் பிரிவில் ஆதார்எண்ணை இணைத்திருப்பதை மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மின் ஆளுமை
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "வீட்டு உரிமையாளர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால், தங்களது சொத்துக்கு ஏதேனும் பிரச்சினை வரும் என்று கருதி இருக்கிறார்கள் வீட்டு உரிமையாளர்கள். தங்களது ஆதார் எண்ணை வாடகைதாரர்கள் பிரிவில் இணைத்துள்ளனர். மின் ஆளுமை முகமை வாயிலாக ஆதார் இணைப்பு விவரங்களை சரிபார்த்த போது இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்துள்ளது.

வீட்டு உரிமையாளர்கள்
மொத்தமுள்ள 2.67 கோடி மின்நுகர்வோரில் 95 லட்சம் பேர் வாடகைதாரர் பிரிவை தேர்வு செய்து,ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதில் 4 லட்சம் பேர் மட்டுமே உண்மையான வாடகைதாரர்கள். எஞ்சிய 91 லட்சம் பேர் வீட்டு உரிமையாளர்கள் ஆவார். எனவே, தற்போது இவர்களது வீடுகளில் ஆய்வு செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications