சென்னையில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலைக்கே போகாமல் 35 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, ரூ.35 லட்சம் வரை பொருட்கள் கொள்முதல் செய்து மோசடி நடந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தம்பதி மற்றும் அவர்களது உறவினர்கள் உள்பட 4 பேரை போரூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். எப்படி சிக்கினார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று போரூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. அந்த புகாரில் போலியான ஆவணங்களை உருவாக்கி பிற தனியார் நிறுவனங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து ரூ.35 லட்சம் வரை மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தது. அந்த புகார் தொடர்பாக போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து எப்படி மோசடி நடந்தது என்று விசாரித்ததுடன், மோசடியில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் மோசடி சம்பவத்தில் தொடர்புடைய அம்பத்தூரை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகீம் (வயது 40), அவரது மனைவி ஆயிஷா (35) மற்றும் இவர்களது உறவினர்களான முக்தார் அகமது, ஜாகீர் உசேன் ஆகிய 4 பேரை போரூர் போலீசார் விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியான. இதன்படி, பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் நடந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக அப்துல் ரகீம் தான் கருதப்படுகிறாம். சம்பந்தப்பட்ட சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து பின்னர் வேலையில் இருந்து நின்றுவிட்டாராம்.
இந்த நிலையில் அதே நிறுவனத்தின் பெயரில் போலியான லெட்டர் பேட் மற்றும் ஜி.எஸ்.டி எண்களை தயாரித்துள்ளார். இந்த போலி ஆவணங்களை பயன்படுத்தி, நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தேவைப்படுவதாக கூறி பல நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை பெற்றுள்ளார். ஆனால், அதற்கான பணத்தை செலுத்தாமல் மோசடி செய்துள்ளாராம். மேலும் மோசடி செய்து பெறப்பட்ட உதிரிபாகங்களை, விற்று பணமாக்கினாராம். ஏற்கனவே வேலை செய்தநபர் என்பதால்,வேலையைவிட்டு அப்துல் ரகீம் நின்றது தெரியாமல் நிறுவனங்களும் பொருட்களை கொடுத்துள்ளன. அதனைவிற்று அப்துல் சம்பாதித்தாராம். ஆனால் நிறுவனத்திடம் பணம் கேட்டு அழைத்த போது தான் உண்மை தெரியவந்துள்ளது.
இதையடுத்து புகாரின் பேரில் கைதான அப்துல் ரகீம் ஏற்கனவே இதேபோன்ற மோசடி குற்றங்களில் ஈடுபட்டு, சைபர் கிரைம் போலீசாரால் 2 முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தொடர் மோசடி மற்றும் அதிகப்படியான பண பரிவர்த்தனைகள் காரணமாக அப்துல் ரகீமின் வங்கி கணக்கை போலீசார் ஏற்கனவே முடக்கியிருந்தனர். இதனால், அவர் தனது மனைவி ஆயிஷாவின் வங்கி கணக்கை பயன்படுத்தியுள்ளார்.
அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டதால், தனது உறவினர்களான முக்தார் அகமது மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோரின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி பணபரிவர்த்தனைகளை தொடர்ந்துள்ளார். இதற்கு உடந்தையாக இருந்ததால் அவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆயிஷாவிற்கு தற்போது 11 மாத குழந்தை ஒன்று உள்ளது. சட்ட விதிகளின்படி, அந்த 11 மாத குழந்தையுடனே ஆயிஷா மற்றும் அவரது கணவர் உள்பட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுததி உள்ளது.














Click it and Unblock the Notifications