"திமுக அரசு நேர்மையாக இருந்தது.. யாரிடமும் பணம் கேட்கவில்லை.." ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு!
சென்னை: முந்தைய திமுக அரசின் ஊழல்கள் காரணமாகத் தமிழகத்திற்கு முதலீடுகள் வராமல் போய்விட்டதாக தவெக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியிருந்தார். இதற்கிடையே திமுக அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச் சிறப்பாக இருந்ததாகவும் எந்தவொரு நிறுவனமும் திமுக அரசு தங்களிடம் பணம் கேட்டதாகச் சொல்லவில்லை என்றும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் பெரும் அளவிலான முதலீடுகளை அண்டை மாநிலங்களிடம் இழந்ததாக தற்போதைய மாநில தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

முதலீடுகள்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முந்தைய திமுக அரசின் நிர்வாகக் குறைபாடுகளும், ஊழல்களுமே இந்த இழப்புகளுக்கு முதன்மைக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய சுமார் 25 முக்கிய முதலீட்டுத் திட்டங்கள் கைவிடப்பட்டு, அவை பிற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக அமைச்சர் கீர்த்தனா குற்றஞ்சாட்டினார்.
குற்றச்சாட்டு
இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 3.34 லட்சம் கோடி ரூபாய் என்றும் இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 2.3 லட்சம் மேற்பட்ட இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். டாடா செமிகண்டெக்டர், சுசூகி மோட்டார் எனப் பல நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் பட்டியலிட்டார். இதற்கு அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்ற அமைச்சர் கீர்த்தனா, உண்மை இப்படி இருக்க தவெக அரசு பொறுப்பேற்ற பின்னரே, முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வது போலப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் சாடினார்.
அமைச்சர் கீர்த்தனாவின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். திமுக தலைவர்கள் நிர்வாகிகள், அமைச்சர் கீர்த்தனா சொல்வதில் எந்தவொரு உண்மையும் இல்லை என்று சொல்லி வருகிறார்கள். இதற்கிடையே திமுக தரப்பிற்கு ஆதரவாக இருக்கும் வகையில் சில கருத்துகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
பாராட்டு
ஆங்கில நாளேடு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருந்த அமைச்சர் நாரா லோகேஷ், முந்தைய திமுக அரசின் முதலீட்டு அணுகுமுறை குறித்துப் பாராட்டிப் பேசியுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக முந்தைய அரசுடன் ஆந்திர அரசு மிகக் கடுமையான போட்டியை எதிர்கொண்டதாகவும் சில முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்கு இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துடன் போட்டியிட்டு சில முதலீடுகளைத் தங்களது மாநிலம் வென்றதாகவும், அதே நேரத்தில் சில முதலீடுகளைத் தமிழகத்திடம் இழந்ததாகவும் குறிப்பிட்ட நாரா லோகேஷ், தமிழகத்தில் முதலீடு செய்ய வந்த எந்தவொரு நிறுவனமும் திமுக அரசு தனியாகப் பணம் கேட்டதாக ஒருபோதும் புகார் கூறவில்லை என்றும் பாராட்டினார். தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் செயல்முறையை திமுக அரசு மிகவும் நேர்மையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் என்பது மிகவும் இரக்கமற்றது என்று குறிப்பிட்ட ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், தமிழகத்திற்குத் தேவையான சிறப்பான முதலீடுகளை ஈர்த்து மிகச் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், திமுக அரசு தேர்தலில் தோல்வியடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
திமுகவினர்
முந்தைய திமுக அரசு தவறான தொழில்துறை கொள்கைகளை வைத்திருந்ததாகவும் ஊழல்கள் காரணமாகத் தமிழகத்திற்கு முதலீடுகள் வராமல் போய்விட்டதாக தவெக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியிருந்த நிலையில், அதற்கு நேர் மாறான கருத்தை அண்டை மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷ் கூறியிருக்கிறார். அவரது பேச்சு தொடர்பான வீடியோவை இப்போது திமுகவினர் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications