ஆதவ் அர்ஜுனா அரசியல்வாதியே கிடையாது.. விஜய் வெளிச்சத்தில் ஒட்டி இருக்கிறார்.. சாடிய இயக்குநர் அமீர்!
சென்னை: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஒரு அரசியல்வாதியே கிடையாது என்றும், அவர் விஜய்யின் புகழ் வெளிச்சத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவர் என்றும் இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா ஒரு லாட்டரி சீட்டு ஓனர் என்று கூறிய அமீர், அரசியல்வாதிக்கான முதிர்ச்சி கூட அவரிடம் இல்லை என்றும் சாடியுள்ளார்.
அண்மையில் தவெக சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர விரும்பியவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்.. ஆனால் திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் பார்த்து கொண்டனர்.

ஆனால் இன்று ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்காகவே நடிக்க போய்விட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் இல்லை.. ஆனால் திமுகவை எதிர்க்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது என்று பேசி இருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சர்ச்சையாகியது. திமுகவுக்கு பயந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போய்விட்டதாக பேசிய கருத்துக்கள் அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இதனை கண்டித்து மதுரை ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுமையாக சாடி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து ரஜினிகாந்த்தை அவமானப்படுத்திவிட்டதாக ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்து இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆதவ் அர்ஜுனாவின் அறியாமை பேச்சு அது..
அறிவீனத்தின் உச்சம்.. அவர் முதலில் ஒரு அரசியல்வாதியே கிடையாது.. இதனை முதலில் இருந்தே சொல்லி வருகிறேன்.. லாட்டரி சீட்டு ஓனர்.. அவர் ஒரு முதலாளி.. விஜய்யின் புகழ் வெளிச்சத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.. அவரின் பேச்சு எதுவுமே அரசியல் நாகரீக பேச்சு கிடையாது.. முதிர்ச்சியான பேச்சு அல்ல.. முதல்வரையே முட்டாள் முதல்வர் என்கிறார்.. அவருக்கு திமுகவினர் மத்தியில் எந்த பதிலும் இல்லை.
ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. திமுக ரொம்ப நல்லவர்கள் போல் நடிக்கிறார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. விமானத்திற்கு செல்லும் போது கூட மது தேவையா? விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் என்றாவது மதுவிலக்கு எதிராக போராடும் போது, உங்கள் கையில் அன்று இருந்தது என்ன? என்று கேள்வி கேளுங்கள்..
அதேபோல் சோசியல் மீடியாவில் விஜய்யின் மனைவியை கூட மோசமான வார்த்தைகளால் சாடுகிறார்கள்.. கருத்தியல் ரீதியாக மட்டுமே விமர்சிக்க வேண்டும்.. பாஜகவை கூட மரியாதை குறைவாக விமர்சிக்க கூடாது. பிரதமர் மோடியை கூட நான் மரியாதைக்குரிய பிரதமர் மோடி என்றே சொல்லுவேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications