Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜித்குமார் மரணத்தில் கதை கட்டும் திமுக அரசு.. வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித்குமாரின் மரணத்தில் அறமற்ற திமுக அரசு கதை கட்டி வருவதாகவும், இதுவரை நடந்த 24 காவல் விசாரணை மரணங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

24 'கஸ்டடி' மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதா? அந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? என்பது குறித்து வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு அரசின் உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Aadhav arjuna dmk government Custody death

இதுகுறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார், காவல்துறை விசாரணையில் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், தி.மு.க. கூட்டணியிலேயே இருக்கக்கூடிய கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தி.மு.க ஆட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்குப் பிறகும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறை - அந்த உள்துறைக்குக் கீழே வரும் காவல்துறை என தி.மு.க ஆட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் கொஞ்சம்கூட திருந்தவோ... வருந்தவோ இல்லை. மாறாக மழுப்பல் நடவடிக்கைகள், பணத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை விலை பேசுவது, உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது என அநீதி நடவடிக்கைகளையே தொடர்ந்து செய்து வருகிறது.

உதாரணத்திற்கு, அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ள தமிழ்நாடு காவல்துறை, அதற்காக தயாரித்த எப்.ஐ.ஆர்-ல் "அஜித்குமார் காவல்துறைக் கட்டுப்பாட்டில் இருந்து இரண்டுமுறைத் தப்பிக்க முயன்றதாகவும், அதில், இரண்டாவது முறை தப்பிக்கும்போது தவறி விழுந்து, வலிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒரு மரணத்தில், கொஞ்சமும் இரக்கமோ... குற்றவுணர்வோ இல்லாமல், பொய்யே கூச்சப்படும் அளவுக்கு பொய்களை நிரப்பி கதை எழுதும் வேலைதான் இந்த எப்.ஐ.ஆர்-இல் வெளிப்படுகிறது. இதில் இருந்து நமக்குத் தெரியவருவது, "பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் செய்ய வேண்டும்; நீதி நிலை நாட்டப்பட வேண்டும்" என்ற அடிப்படையில் அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு, கொலை வழக்காக மாற்றப்படவில்லை.

மாறாக, இன்று அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்றம், தி.மு.க ஆட்சிக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துவிடுமோ... விளம்பர மாடல் ஆட்சியின் வேஷம் கலைந்துவிடுமோ என்ற பதற்றத்தில், வெறும் மழுப்பல் நடவடிக்கையாக மட்டுமே இதைச் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், "உடலில் 18 இடங்களில் கொடும் காயங்கள் இருந்தன; எலும்புகள் உடைந்திருந்தன; உடலுக்கு வெளியில் மட்டுமில்லாமல், உடலுக்கு உள்ளேயும் உறுப்புகள் காயமடைந்திருந்தன; தொண்டைக்குள்ளும் கொடும் காயங்கள் இருந்தன" எனத் தெளிவான பிறகும், இப்படி ஒரு பித்தலாட்டமான எப்.ஐ.ஆர்-யைத் தயார் செய்துள்ளது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை!

சென்னையில் காவல்துறை விசாரணையில் விக்னேஷ்குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்டபோதும், இதே முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே, "அது மர்ம மரணம்" என பச்சையாகப் பொய் சொன்னார். அவர் வழியிலேயே,அவருடைய கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையும் அஜித்குமாரின் மரணத்தில் பச்சைப் பொய்யைக் கதையாக எழுதி வைத்திருக்கிறது.

எப்.ஐ.ஆரே இந்த லட்சணத்தில் இருக்கிறதென்றால், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, அதே காவல்துறையால் நடத்தப்பட்ட 'கஸ்டடி' மரணத்தை, எந்த லட்சணத்தில் விசாரிக்கும் என்பது நமக்குத் தெரியாதா?! அதனால், அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரித்ததைபோல, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

காவல்துறை உயரதிகாரிகளின் தலையீடு காரணமாகவே அஜித்குமார் கடுமையாகச் சித்ரவதை செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அந்த உயர் அதிகாரிகள் யார்? என்பதை மறைத்து, காவல்துறையில் கடைநிலையில் உள்ள 5 கான்ஸ்டபிள்கள் மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் மூளையாக இருந்து உத்தரவிட்ட உயர் அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.

இந்த விவகாரத்தில், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் பணத்தைக் காட்டி, சட்ட விரோதமாக சமாதானம் பேச முயன்ற தி.மு.க நிர்வாகிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும். அதோடு, தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறுக்கவில்லை.

எனவே, அந்த 24 'கஸ்டடி' மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதா? அந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? என்பது குறித்து வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு அரசின் உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட வேண்டும்.

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கும் மற்ற 24 காவல் மரண வழக்குகளிலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய நிதியையும் - சரியான நீதியையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். ஊழல் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை வைத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகங்களின் வாயை மூடி விடலாம் என்ற மமதையில் இருக்கும் ஆளும் தி.மு.க அரசு மீது பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் கோபத்தை மறைக்க முடியாது!

காவல் விசாரணையில் மரணமடைந்த அஜித்குமார் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தந்தையை இழந்த ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்குவது எத்தனை சிரமம் என்பது, மன்னராட்சி மனப்பான்மையில் இருப்பவர்களுக்குப் புரியாது. மகனை இழந்து வேதனையில் தவிக்கும் அஜித்குமாரின் தாயாருக்கும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் போராடும் பொதுமக்களுக்கும் எந்தச் சூழலிலும் தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாய் நிற்கும், போராடும், வாய்மையே வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+