மாறிய காட்சிகள்.. புஸ்ஸி ஆனந்த் உடன் கூடவே களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! தவெகவில் திடீர் மாற்றம்
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அடுத்த கட்டமாகப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டுப் பணிகளை புஸ்ஸி ஆனந்த் மட்டுமே கவனிப்பார். ஆனால், இந்த முறை புஸ்ஸி ஆனந்த் உடன் சேர்ந்து ஆதவ் அர்ஜுனாவும் இணைந்து களத்தில் இறங்கியுள்ளார். ஆய்வுப் பணிகளில் அவரும் சேர்ந்து தீவிரம் காட்டி வருகிறார்.
நடிகர் விஜய் இப்போது சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் ஒருசேரப் பயணித்து வருகிறார். ஒரு பக்கம் ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடிக்கும் விஜய், இன்னொரு பக்கம் கட்சி பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

தொடர்ச்சியாகக் கட்சி நிர்வாகிகளை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தும் விஜய், பல முக்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தான் தமிழ்நாடு முழுக்க மாவட்டச் செயலாளர்கள் கூட நியமிக்கப்பட்டனர்.
பொது கூட்டம்:
இதற்கிடையே அடுத்த கட்டமாக தவெக சார்பில் பொது குழு கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி தனியார் சொகுசு விடுதியில் இந்த பொது குழுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுக்க உள்ள பொது குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்திற்கு வருவார்கள் என்பதால் அவர்கள் சிரமமில்லாமல் வந்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
களத்தில் ஆதவ் அர்ஜுனா:
இதற்கு முன்பு தவெக சார்பில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தான் கவனித்து வருவார். ஆனால், இந்த முறை புஸ்ஸி ஆனந்த் உடன் ஆதவ் அர்ஜுனாவும் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார். இந்த பொதுக் குழுவில் தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை விஜய் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பொதுக்குழு கூட்டத்தைச் சிறப்பாக நடத்தும் முனைப்பில் தவெக தலைவர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே புஸ்ஸி ஆனந்த் உடன் ஆதவ் அர்ஜுனாவும் களமிறங்கியுள்ளார்.
என்ன காரணம்:
சமீபத்தில் தான் தவெக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் மேலாண்மைக் குழு பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு கட்சி நடவடிக்கைகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இப்போது பொதுக்குழுக் கூட்டம் நடத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.. வரும் காலங்களில் தவெக கட்சி பணிகளில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என்றே தெரிகிறது.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இருந்தார். விசிகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அப்போது கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியது.. குறிப்பாக அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியிருந்தார். கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை விமர்சித்து அவர் பேசியது சர்ச்சையான நிலையில், அவரை விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்து அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
தொடர்ந்து சில நாட்களிலேயே விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். அதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த ஆதவ் அர்ஜுனா, அதன் பிறகு விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவருக்குத் தேர்தல் மேலாண்மைக் குழு பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications