திருமாவளவன் பற்றி பேசி.. சட்டென மாற்றி பேசிய ஆதவ் அர்ஜுனா! என்ன நடந்தது? அருண்ராஜ் விளக்கம்
சென்னை: திருமாவளவன் பற்றி, தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர், ஆதவ் அர்ஜுனா பேசியிருந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதற்கு ஆதவ் விளக்கமளித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து தவெக அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, "தமிழகத்திற்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று முருக பெருமானிடம் அனைவரும் வேண்டிக்கொள்கிறோம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். செங்கோட்டையனை பற்றி அனைவருக்குமே தெரியும். 50 வருடங்கள் அரசியல் அனுபவம் பெற்றவர்.

அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்றவர். திமுக வந்து ஊழல் பத்தி பேசுது ரொம்ப வேடிக்கையா இருக்கு. இப்ப எந்த அளவுக்கு ஊழல் பெருகி இருக்கங்கறது எல்லாத்துக்கும் தெரியும். அதனால இந்த குற்றசாட்டுல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் குறித்து பேசியதற்கு அவர் விளக்கம் கொடுத்துட்டாரு. அதை பற்றி பற்றி பேச தேவையில்லை" என கூறியிருக்கிறார்.
ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?
"திருமாவளவன் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை திட்டிக்கொள்ளட்டும். ஆனால், உங்கள் கட்சி இங்க மாறி எவ்ளோ நாள் ஆச்சு? கட்சியில் நீங்களும் ஒரு 20 பேரும் மட்டும்தான் இருக்கிறீர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அம்பேத்கரின் வாரிசு என்று திருமா பேசி வருகிறார். ஆனால், திருமாவை திமுக அடியாளகத்தான் பயன்படுத்தி வருகிறது. திமுகவில் ஊழல் இல்லை என்று விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளால் சொல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
விளக்கமளித்த ஆதவ்
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றவர்தான் ஆதவ் அர்ஜுனா. இப்படி இருக்கையில், திருமாவளவனை அவர் விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து சிறுத்தைகள் கொந்தளித்தனர். எனவே ஆதவ் விளக்கமளித்திருந்தார். அதில், "எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு... இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்தத்தை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள்.
சொல்ல வந்தது இதுதான்
அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன்.
திமுக திரித்துவிட்டது
'ஆட்சியிலும் பங்கு... அதிகாரத்திலும் பங்கு...' என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது' என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications