ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை விஜய் அறிவித்து உள்ளார். இதன்படி தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வில்லிவாக்கம் தொகுதியை ஒதுக்கி இருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியினை ஆதவ் அர்ஜுனா தேர்வு என்ன காரணம்? கள நிலவரம் என்ன என்று இங்கு காணலாம்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே மீதம் உள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் பிசி ஆகி உள்ளன. நாளை முதல் வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா
இந்த முறை தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தேர்தலை சந்திக்கிறது. இந்த நிலையில் இன்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தி நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்தும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனும் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். இதேபோல் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட சீட் வழங்கியுள்ளார் விஜய்.
பூக்கடை குமார்
ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தை தேர்வு செய்ய முக்கிய காரணமாக அங்கு விஜய்க்கு ஆதரவு அலை இருப்பதை அறிந்துகொண்டே அவர் அந்த தொகுதியினை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன்பே வில்லிவாக்கம் தொகுதி அடங்கியுள்ள சில தொகுதிகளை குறிவைத்தே புஸ்சி ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.
தவெக மத்திய சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பவர் பூக்கடை குமார். இவர் விஜய் கட்சி தொடங்கும் முன்பே வில்லிவாக்கம் பகுதியில் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கட்சி ஆரம்பித்த பிறகு நமக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்த்து இருந்தாராம். இதற்கிடையே தான் ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைந்ததார்.
விஜய் செல்வாக்கு அதிகம்
அவருக்கு தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் புஸ்சி ஆனந்துக்கு அடுத்தப்படியாக விஜய் அதவ் அர்ஜுனாவை வைத்திருந்ததாலும், நமக்கு எங்கெல்லாம் ஆதரவு அலை அதிகமாக இருக்கிறது என்பதையும் ஆதவ் அர்ஜுனா தேடி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. வில்லிவாக்கத்தில் அதிக ஆதரவாளர்கள் இருப்பதை அறிந்து தான் இந்த தொகுதிக்கு விருப்ப மனு அளித்துள்ளாராம்.
பூக்கடை குமார் வில்லிவாக்கத்தில் போட்டியிட தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில் இது அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாம். கடும் மன உளைச்சலுக்கு ஆளான பூக்கடை குமார் இதுகுறித்து புஸ்சி ஆனந்திடம் சொல்லி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறதாம். அப்போது அவர் குமாரை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
திமுகவின் கார்த்திக் மோகன்
வில்லிவாக்கம் தொகுதியை பொறுத்தவரை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்ப்பில் வெற்றியழகன் வேட்பாளராக களமிறக்கப்பட்டு 52.83 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குறிப்பாக அதிமுக - திமுக இருக் கட்சிகளும் மாறி மாறி போட்டியிட்டு பெற்று வருகிறது. இந்த முறை திமுக சார்பில் கார்த்திக் மோகன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
திமுக வசம் உள்ள தொகுதியாக பார்க்கப்படும் வில்லிவாக்கத்தில் அதிமுக சார்பில் தற்போது எஸ்.ஆர் விஜய்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ரோஷிணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா களம் இறங்கி இருக்கிறார். 50 சதவீத வாக்கு வங்கி வைத்துள்ள திமுகவை வீழ்த்தி ஆதவ் அர்ஜுனா வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications