பாஜக பக்கம் திரும்பிய ஆருத்ரா முதலீட்டாளர்கள் கோபம்! சென்னை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசம்!
சென்னை: ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆருத்ரா கோல்டு நிறுவனமானது பொதுமக்களிடம் ரூ2,000 கோடி வசூல் செய்து ஏமாற்றி இருக்கிறது என்பது வழக்கு. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் 20% முதல் 30% கூடுதல் வட்டி கிடைக்கும் என மோசடியாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் ரூ2,000 கோடி அளவுக்கு முதலீடு செய்தனர். ஆனால் வாக்குறுதி அளித்த படி ஆருத்ரா நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை தரவில்லை.

இது தொடர்பாக ஆருத்ரா நிறுவனம் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனிடையே இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த பாஜக நிர்வாகி ஹரீஷ் அதிரடியாக கைது செய்யபப்ட்டார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது. பாஜகவில் பதவி பெறுவதற்காக பல நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஹரீஷ் அதிரடி வாக்குமூலம் கொடுத்தார்.
ஹரீஷ் கொடுத்த இந்த வாக்குமூலம் பாஜகவில் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டிருகிறது. ஆருத்ரா நிறுவன ஹரீஷிடம் லஞ்சம் பெற்ற பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள், ஹரீஷிடம் பதவி தருவதற்காக லஞ்சம் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆருத்ரா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருப்பதால் பாஜக மாநில நிர்வாகிகள் அந்த கட்சியைவிட்டே வெளியேறி வருகின்றனர். ஆருத்ரா விவகாரத்தை முன்வைத்து தாங்கள் விலகுவதாகவும் அறிக்கைகளில் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
இதனிடையே ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் கோபம், பாஜக மீது திரும்பி உள்ளது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை இன்று ஆருத்ரா முதலீட்டாளர்கள் முற்றுகையிட முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications