ரேஷன் கடைல ஆவின் பொருளா? கேட்கவே சூப்பரா இருக்கே! சட்டப்பேரவையில் அமைச்சர் நாசரின் அசத்தல் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கை கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து துறை ரீதியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று சட்டப்பேரவையில் பால்வளத்துறை, மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

ரூ.150 கோடி செலவில் ஆலை
அப்போது பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தார். பெரம்பலூர் மாவட்டம் பாலலூரில் தினசரி 6 லட்சம் லிட்டர் பாலை கையாளும் வகையில் ரூ.150 கோடி செலவில் பால் பொருள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு சலுகை
அதேபோல், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பயின்று கூடுதல் மதிப்பெண்களை பெறும் பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். பால் உற்பத்தியாளர்களின் இறுதிச் சடங்குகளுக்காக ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் ரூ.50 கோடி செலவில் 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படும் என்றார். அதேபோல் ஆவினில் 10 வகையான புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார். அனைத்துக்கும் மேலாக ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவிப்பு வெளியிட்டது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

2 வது வெண்மை புரட்சி
இன்று அமைச்சர் ஆவடி நாசர் வெளியிட்ட பால்வளத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில், பால் உற்பத்தியின் மூலம் தமிழ்நாட்டில் 2 வது வெண்மை புரட்சியை ஏற்படுத்துவதே அரசின் குறிக்கோள் எனக் குறிப்பிட்டு இருந்தார். பாலுக்கு நியாயமான விலையை வழங்க உறுதி செய்வதுடன், நுகர்வோருக்கும் நியாயமான விலையில் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணைய வழிகாட்டுதலின்படி சுகாதாரமான தூய்மையான பதப்படுத்தப்பட்ட பால் வழங்குவது உறுதி செய்யப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புக்குள் இல்லாத பால் பண்ணைகளை முறையான கட்டமைப்புக்குள் கொண்டு வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் தீவணங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications