வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம்..தவெக தப்பா முடிவெடுக்காதீங்க! கிருபாகரன் சொன்னதையே சொன்ன ரஜினி நண்பர்!
சென்னை: " 2026 தேர்தலில் தன்னுடைய தலைவர்தான் வெற்றி பெற வேண்டும். தன்னுடைய கட்சிதான் வெற்றி பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை வெற்றி பெற்றால் கொண்டாடி விடலாம். வெற்றி பெறவில்லை என்றால் தாங்குகின்ற மனநிலை வேண்டும்" என ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் விஜய் மற்றும் தவெக குறித்து கூறியிருந்தார். இந்நிலையில், அவரது கருத்தை வரவேற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், பாஜக நிர்வாகியுமான அர்ஜுனமூர்த்தி.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக முடிந்துவிட்டது. பல தரப்பினரும் இந்த முறை வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருந்ததாகக் கூறி, இதை 'வரலாறு காணாத வாக்குப்பதிவு' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 5 கோடி 73 லட்சம் வாக்காளர்களில் சுமார் 4 கோடி 82 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இடையே தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றன. டைம்ஸ் நவ், ஜேவிசி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்கின்றன. இந்த நிலையில் காமக்யா மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா உள்ளிட்டவை 90 சீட்டுகளுக்கு மேல் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என கணித்துள்ளன.
விஜய்க்கு ஆதரவாக வெறும் இரு கருத்துக்கணிப்புகள் மட்டுமே வந்திருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாகமாக இருக்கின்றனர். அதே நேரத்தில் பலர் சமூக வலைதளங்களில் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தேர்தலின் போது பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன்," சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருப்பது மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தது மகிழ்ச்சி என்றாலும் இளம் தலைமுறை மற்றும் குழந்தைகள் நடந்து கொண்டது அதிர்ச்சியாக இருக்கிறது.வெற்றி தோல்வி சகஜம் தான் .தேர்தலில் நிற்கும் கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் சிலர் மாயையில் இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் இளைஞர்கள் இந்த மாதிரி தன்னுடைய தலைவர் தான் வெற்றி பெறுவார் என நினைக்கிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் வெற்றி தோல்வியை தாங்குகின்ற மனநிலை வேண்டும்.
ஒரு பெண்மணி இவர் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் நான் என்னுடைய குழந்தைகளை கொன்று விட்டு நானும் இறந்து விடுவேன் என்கிறார். சிலர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வேன் என சொல்லுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது எனக் கூறியிருந்தார். அதாவது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதன் தொண்டர்களை தான் அந்த கட்சியின் தொண்டர்களை தான் நீதிபதி கிருபாகரன் மறைமுகமாக கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அவரது கருத்தை வரவேற்று இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும் பாஜக பிரமுகருமான அர்ஜுன மூர்த்தி. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஓய்வு பெற்ற நீதிபதி திரு. கிருபாகரன் அவர்கள், தமது அனுபவத்தின் வெளிப்பாடாக, ஜனநாயகத்தின் நலனையும் குறிப்பாக இளைஞர் சமூகத்தின் பாதுகாப்பையும் முன்னிறுத்தி சில முக்கியமான வழிகாட்டுதல்களை முன்வைத்துள்ளார்.
அவரது கருத்துக்களை முன்னிறுத்தி பார்க்கும்போது, அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களிடம் செல்வாக்கு கொண்ட திரைத்துறை முன்னோடிகளும் குறிப்பாக நடிகர் விஜய் அவர்கள் போன்றோர் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, தமிழ்நாட்டின் நலனும் அமைதியும் பாதுகாக்கப்படும்வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த நேரத்தில், வெற்றியும் தோல்வியும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்களாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எந்த முடிவாக இருந்தாலும் அதை அமைதியுடனும் பொறுப்புடனும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு சமூகத்தில் வலுப்பெறுவது அவசியம். வாக்களித்தல் என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையோடு இணைந்த பொறுப்பாகும்.
அதேசமயம், இளம் வயதினரிடையே அரசியல் புரிதல் முழுமையாக உருவாகும் வரை, அவர்களிடம் உணர்ச்சிவசப்பட்ட ஈர்ப்புகள் உருவாகாமல் இருக்க கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக, "குட்டீஸ்... உங்க அப்பா, அம்மா, அண்ணா, அக்கா எல்லாரையும் விஜய்க்கு வாக்களிக்க சொல்லுங்க..." போன்ற அழைப்புகள், குழந்தைகளின் மனதில் அரசியல் புரிதலின்றி ஈர்ப்பை உருவாக்கக்கூடியவை என்பதால், இத்தகைய அணுகுமுறைகளில் கூடுதல் பொறுப்புணர்வு கடைபிடிக்கப்படுவது சிறந்தது.
எனவே, சமூகத்தில் தவறான முன்னுதாரணங்கள் உருவாகாமல் இருக்க, பொது வாழ்க்கையில் உள்ளோர் தங்கள் சொற்களிலும் செயல்களிலும் அதிக கவனமும் பொறுப்பும் காட்ட வேண்டும். இளைஞர்களின் மனநிலையையும் சமூக ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு, ஜனநாயக மதிப்புகளை பாதுகாக்கும் நோக்கில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை இந்நேரம் வலியுறுத்துகிறது. நீதிபதி அவர்களின் கருத்துக்களை மதித்து, தேர்தல் முடிவுகள் எவ்வாறிருந்தாலும் இளைஞர்களின் பாதுகாப்பும் சமூக அமைதியும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் மரியாதையுடனான வேண்டுகோள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications