'கட்டா குஸ்தி 2' பற்றி எதிர்பாராத ரிவ்யூ கொடுத்த ப்ளூ சட்டை மாறன்! இவரே இப்படி சொல்லிட்டாரே?
சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் குடும்ப ரசிகர்களை கவர்ந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் நாளிலேயே படம் சுமார் ₹2.55 கோடி வசூல் செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் படக்குழுவுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், எந்தப் படமாக இருந்தாலும் நேரடியாக விமர்சித்து பேசும் ப்ளூ சட்டை மாறன், இந்தப் படம் குறித்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்த விமர்சனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
அவர் பேசும்போது, "மலையாளத்தில் வெளியான 'ஜெய ஜெய ஜெய ஹே' படமும், இந்த 'கட்டா குஸ்தி' படமும் ஒரே மாதிரியான கதைக்களம் கொண்டவை. அந்தப் படம் பெரிய ஹிட். ஆனால் அந்தப் படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்க மாட்டார்கள். ஏன்னா, இதைவிட இன்னும் நல்ல படம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் நம்ம ஊர்ல ஒரு ஹிட் கிடைச்சா, அதையே பிடிச்சுக்கிட்டு இன்னொரு பாகம் எடுப்பதுதான் வழக்கம். அதனால 'கட்டா குஸ்தி 2' எப்படி இருக்கும் என்ற சந்தேகத்தோட தான் படம் பார்க்க போனேன்" என்று கூறினார்.

அதன்பிறகு படத்தின் திரைக்கதை குறித்து பேசிய அவர், "கண்டிப்பா இந்தப் படத்தை வைத்து நம்மை சாகடிச்சுடுவாங்கன்னு நினைச்சுதான் போனேன். ஆனா, முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் இடையிலான கதையை ஓரளவுக்கு முறையாகவே எழுதி இருக்காங்க. ஸ்போர்ட்ஸ் ட்ராமாவோட கொஞ்சம் குடும்பம், கொஞ்சம் காமெடி கலந்து நல்லா எடுத்திருக்காங்க. காமெடி படம் பார்க்கும்போது லாஜிக் அதிகமா எதிர்பார்க்கக் கூடாதுன்னு நாமே நினைச்சுட்டு போனோம்" என்றார்.
அதோடு படத்தில் இருந்த பலம் பற்றியும் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். "இந்தப் படத்தில் ஓரளவுக்கு கதை இருக்கு. அதுக்கான திரைக்கதையும் இருக்கு. நிறைய நல்ல சீன்களும் இருக்கு. ஆனா அந்த நல்ல சீன்களை இன்னும் ரொம்ப நல்ல சீன்களா மாற்றியிருக்கலாம். ஹீரோ ஸ்கோர் பண்ண வேண்டிய இடங்களை கொஞ்சம் அவசர அவசரமா எடுத்த மாதிரி தோணிச்சு. கொஞ்சம் நேரம் எடுத்திருந்தா இன்னும் எமோஷனலா கனெக்ட் ஆயிருக்கும்" என்று தெரிவித்தார்.

யோகி பாபுவின் நடிப்பு
யோகி பாபுவின் கதாபாத்திரம் பற்றியும் அவர் தனது வழக்கமான பாணியில் பேசினார். "படம் நல்லா போயிட்டு இருந்தப்போ திடீர்னு யோகி பாபு வந்துட்டாரு. இனிமே படம் அவ்வளவுதான்னு நினைச்சேன். ஆனா நல்ல வேளையா அவரிடமிருந்து படமே தப்பிச்சிடுச்சு" என்று காமெடியாகவே விமர்சித்தார்.
கடைசியில் படம் குறித்து அவர் கூறிய கருத்துதான் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. "முதல் பாகத்தில் அடுத்த காட்சி என்னன்னு கணிக்க முடியாது. இந்தப் படத்தில் அந்த சஸ்பென்ஸ் கொஞ்சம் குறைவு. ஆனாலும் முதல் பாகத்தைவிட இதில் எமோஷனல் சீன்கள் அதிகம். அதுவும் நல்லா ஒர்க் அவுட் ஆயிருக்கு.

படத்தின் பிளஸ்
பெரிய லாஜிக் எல்லாம் தேடாம, மூளையை வீட்டிலேயே கழற்றி வச்சிட்டு குடும்பத்தோட ஒரு வார இறுதியில் படம் பார்க்கணும்னு நினைச்சா தாராளமா இந்தப் படத்துக்கு போகலாம். பெண்களும் குழந்தைகளும் நல்லா ரசிப்பாங்க. ஆண்களுக்கும் பெருசா போரடிக்காது. மொத்தத்துல இது மோசமான படம் இல்லை" என்று தனது விமர்சனத்தை முடித்தார்.
ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர் கூட "மோசமான படம் இல்லை" என்று கூறியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள 'கட்டா குஸ்தி 2', இந்த விமர்சனத்துக்குப் பிறகு வார இறுதி நாட்களில் மேலும் அதிகமான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications