எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கடந்த 2006- 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம் ஆர் கே பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எம் ஆர் கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications
