நிலம் ஆக்கிரமிப்பு.. அரசு அதிகாரிகளை அதிர வைத்த அமைச்சர் சேகர் பாபு பேட்டி
சென்னை: நில ஆக்கிரமிப்பில் அரசு அலுவலர்கள் துணை போனதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் கந்தகோட்டம் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தது பாஜக பிரமுகர் தான் என்றும் பேட்டியின் போது கூறினார்.
சென்னை போல் அசுர வளர்ச்சி அடைந்த ஒரு நகரத்தை இந்தியாவில் கண்டிப்பாக தேடித்தான் பார்க்க வேண்டும். சென்னை பெருநகரம் தான் என்றாலும், 2020க்கு பின், அதாவது ஐடி துறைகளின் அசுர வளர்ச்சியால் சென்னை அடைந்த மாற்றம் பிரம்மிப்பான ஒன்று. சென்னையின் புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், நாவலூர், ஆவடி, அம்பத்தூர், எண்ணூர், மணலி, மாதவரம் என சென்னை தாங்க முடியாத மக்கள் நெருக்கத்தை சந்தித்து.

ஒரு காலத்தில் சென்னை மாநகரம் ஏரியின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு ஏரிகள் இருந்தது. ஆனால் தாங்க முடியாத அளவிற்கு மக்கள் வந்ததால், பல ஏரிகள் காணாமல் போயின. வெறும் 24 வருடத்தில் தான் சென்னை இவ்வளவு வாகன நெருக்கத்தையும், மக்கள் நெருக்கத்தையும் சென்னை சந்தித்து. சென்னை தனது அசுர வளர்ச்சி காரணமாக இழக்கவே கூடாத ஏரிகள், நீர்வழித்தடங்கள் மற்றும் வயல்வெளிகளை இழந்தது. இந்நிலையில் இதற்கு அதிகாரிகளும் துணை போனதாக புகார்கள் உள்ளது. பல்வேறு நிலங்கள் இன்றும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்நிலையில் 2015 வெள்ளத்திற்கு பின், சென்னையில் ஆக்கிரமிப்பை அரசுகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகின்றன. அரசு புதிதாக ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பது இல்லை.. அதேநேரம் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. பல்வேறு நிலங்களின் உள்ள ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றி வருகிறது அரசு.
இந்நிலையில் சென்னை கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, புதிய மருத்துவ மையத்தை அமைச்சர் சேகர்பாபு புதன்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, தென் சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன் , இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ சென்னை மண்டல இணை ஆணையர் ஜ.முல்லை, உதவி ஆணையர் (பொறுப்பு) சி.நித்யா, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் சேகர்பாபு பேசுகையில், "கந்தக்கோட்டம் கோவில் சார்பில் தொடங்கப்பட்டுள்ள புதிய மருத்துவ மைய இடமானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. சட்டப்படி நீதிமன்றத்தை நாடி இந்த இடத்தை மீட்டிருக்கிறது. கந்தகோட்டம் நிலத்தை பாஜக நிர்வாகி தான் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியைப் பொறுத்தளவில் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்காது. அதேபோல நில ஆக்கிரமிப்பில் அலுவலர்கள் துணை போனதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் சட்டப்படியான நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
திமுக அரசு பொறுப்பேற்றபின், இதுவரையில் 1,462 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. இந்த ஆட்சி ஏற்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள்ளாக சுமார் 18,400 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வரும் மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி பெருவிழா, கோவில்கள் சார்பில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற போகிறது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications