உலக சரித்திரத்திலேயே மைக் பிடிக்காம,பிரஸ் மீட் நடத்தாம கட்சியை அறிவித்த ஒரே ஒரு 'தலைவர் 'விஜய்’தான்!
சென்னை: காலம்தான் எவ்வளவு அதிவேகமாக உருமாறி கொண்டிருக்கிறது.. அரசியல்தான் எவ்வளவு கிள்ளு கீரையாகிப் போய்விட்டது பாருங்கள்! ஒரு கட்சியை தொடங்குவதற்கு, ஒரு கட்சி பெயரை அறிவிப்பதற்கு பல மாதங்களாக திட்டமிட்டு பிரம்மாண்டமான மாநாடு நடத்தி கொள்கை பிரகடனம் வெளியிட்டு 'மாஸ்' காட்டுவதுதான் பொதுவான அரசியல். ஆனால் உலக அரசியல் அரங்கத்தில் முதல் முறையாக சும்மா ஒரு லெட்டர் பேடு அடித்து அதில் கட்சி தொடங்கிவிட்டேன் என அறிக்கையை வெளியிட்டு 'நானும் தலைவன்' என பிரகடனப்படுத்தி இருப்பவர் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், புரட்சி இயக்குநர் என பட்டம் பெற்றவர். தமது படங்கள் மூலம் சமூக அவலங்களை விமர்சித்தவர்; சமூக அவலங்களை சாடியவர். அவரது மகன் என்ற ஒரே ஒரு அடையாளத்துடன் திரைத்துறைக்கு கொண்டு வரப்பட்டவர் நடிகர் விஜய். பெரும் போராட்டங்களுக்கு பின்னரே இப்போது தென்னிந்திய சினிமாவின் உச்சநட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் பொதுவாக பொழுதுபோக்கானவைதான். அப்படித்தான் நுனிப்புல் மேய்ந்த இயக்குநர்கள், அரை குறை அரசியல் புரிதல் கொண்ட இயக்குநர்கள் உருவாக்கிய சில அரசியல் சார்ந்த படங்களிலும் நடித்திருக்கிறார் விஜய். அவ்வளவுதான் விஜய்க்கும் அரசியலுக்குமான உறவு. சமூகம் சார்ந்த பென்னம் பெரிய போராட்டங்களை நடத்தியவராக, கருத்து சொன்னவராக தம்மை வெளிப்படுத்தியவரும் அல்ல.. ஆகக் குறைந்தபட்சம் ரஜினிகாந்த் போல வலதுசாரி கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் கூட சிக்கிக் கொள்ளாமல் பதுங்கி பதுங்கி நகரக் கூடியவர்தான் விஜய்.
அரசியலுக்கு வரும் போதே தமது அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக ஜோசப் விஜய் என நேற்று வரை அறிக்கை வெளியிட்ட சுவடை எளிதாக தூக்கிப் போட்டுவிட்டு விஜய் என தம்மை உருமாற்றிக் கொண்டுள்ளார். சரி அரசியலுக்கு வருவதாக அறிவிக்க ஒரு மாநாடு நடக்கும், ஒரு கொள்கை பிரகடனம் இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்தால் பிரஸ் ரிலீஸ் ஒன்றை லெட்டர் பேடில் வெளியிட்டு, ஏ நானும் அரசியலுக்கு வந்துட்டேன்.. அரசியலுக்கு வந்துட்டேன், நானும் தலைவன் நானும் தலைவர் என அறிவித்துக் கொண்டிருக்கிறார் நேற்றைய ஜோசப் விஜய்யாகிய இன்றைய விஜய்.
உடனே, யப்பா இது டிஜிட்டல் யுகமய்யா.. அப்படித்தான் இருக்கும் என்பார்கள் நம்மவர். சரிப்பா டிஜிட்டல் யுகம்தானே.. ஒரு வீடியோ வெளியிடலாமே.. ஒரு வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங் நடத்தலாமே.. ம்ஹூம் எதுவும் இல்லை. அரசியல் என்றால் ஏதோ ஒரு லெட்டர் பேடில், 2024 தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை; ஊழல் மலிந்து கிடக்கிறது; 2026-ல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என திரைப்பட வசனங்களைப் போல ஸ்கிரிப்ட்டை பார்த்து டைப் செய்துவிட்டு அறிக்கை வெளியிடுவது ஒரு அரசியல்.. இது சினிமாவில் நடித்து கொண்டிருப்பது அல்ல என்பது எப்படி 'தலைவா' விஜய்க்கு புரியும்? இதுவே புரியாமல் எப்படி அரசியலுக்கு வந்து காலத்தை ஓட்டுவதாம்? என்னமோ போடா மாதவா என்கிற வேதனையைத்தான் உயிருள்ள ஜனநாயக அரசியல் வெளிப்படுத்தும்!












Click it and Unblock the Notifications