தந்தையின் இறுதிச் சடங்குகள் குடும்ப நிகழ்வு.. தனிப்பட்ட முறையில் செய்ய நடிகர் அஜித் வேண்டுகோள்
சென்னை: தந்தை சுப்பிரமணியத்தின் இறுதி சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்- அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 3.15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுதி சடங்கு இன்று காலை 10 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெறுகிறது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.
அஜித் வீட்டில் சோகம்... உடல் நலக்குறைவால் தந்தை மறைவு... ரசிகர்கள் அதிர்ச்சி!

பக்கவாதம்
இதுகுறித்து அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது: எங்களது தந்தையார் திரு.பி.எஸ். மணி (85) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்தும் மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

60 ஆண்டு காலம் அர்ப்பணிப்பு
எங்கள் தந்தையார் சுமார் 60 ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகிறார்கள்.

இரங்கல்
தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும் இழப்பையும் புரிந்து கொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டி கொள்கிறோம். இவ்வாறு அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரங்கல் செய்திகளை [email protected] அனுப்பலாம்.

முதல்வர் ஸ்டாலின்
அஜித்குமாரின் தந்தை இறப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: "நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அது போல் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

உதயநிதி அஞ்சலி
அஜித்குமாரின் தந்தையின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அது போல் நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். இறந்த அஜித்தின் தந்தை பிஎஸ் மணிக்கு மோகினி என்ற மனைவியும் அனில் குமார், அனூப் குமார், அஜித் குமார் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications