நாளை கட்சி கொடியை அறிமுகம் செய்யும் விஜய்! மாஸாக ஏற்பாடுகள் செய்யும் தவெக! இவங்களும் வர்றாங்களா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார். விஜய் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதிலிமிருந்தும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் கட்சியினர் மட்டுமின்றி மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கொடி ஏற்றும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் நடத்த அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ள நிலையில், கட்சியின் கொடியை எப்போது விஜய் அறிமுகம் செய்வார் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஏற்கனவே கட்சிக் கொடி தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் "வாகை" மலர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இரு வண்ணங்கள் கொண்ட 3 வகையான கொடிகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒன்றை விஜய் தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட்22ஆம் தேதியான நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றி வைக்கிறார் விஜய். இதற்காக சுமார் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிக் கம்பம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் தான் கொடியை ஏற்றுகிறார் விஜய். இதனையடுத்து இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக புஸ்ஸி ஆனந்த் அங்கேயே தங்கியிருந்து ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
கட்சியின் கொடியில் மஞ்சள் சிகப்பு என இரண்டு வண்ணங்கள் இடம்பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அதில் வாகை மலரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 19ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகமான பனையூரில் உள்ள விஜய் அலுவலகத்தில் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கொடியில் விஜய்யின் முகம் இருந்தது. ஆனால் நாளை வெளியிடப்பட உள்ள கொடியில் வாகை மலர் இடம்பெறுமா அல்லது விஜயின் முகமே இடம்பெறுமா என்பது கேள்வியாக இருக்கிறது.
இந்த நிலையில் கட்சி கொடி அறிமுக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அலுவலகத்திற்குள் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 200 பேர் முதல் 300 பேர் வரை பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பனையூர் அலுவலகம் கிழக்கு கடற்கரை சாலையில் இருப்பதால் ஏராளமானோர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை அடுத்து உரிய பாதுகாப்பு கேட்டு நீலாங்கரை மற்றும் கானத்தூர் காவல் நிலையங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர் அது மட்டும் அல்லாமல் மூத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், திரைப்பட பிரபலங்கள், நடிகர் விஜய்யின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications