பிராமணன் ரெண்டு கல்யாணம் பண்ணக் கூடாதா? இன்னும் 49 ஆயிரம் பாக்கி இருக்கு! கமல் தக்லைஃப் ரிப்ளை
சென்னை: பிராமணன் இரு திருமணம் செய்து கொள்ளலாமா என எம்பி ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அளித்த பதில் என்ன என்பது குறித்து தக் லைப் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு முதல் முறையாக சேர்ந்து நடித்திருக்கும் தக்லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

36 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கிறது இந்த படம். இது ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. தக்லைஃப் நிகழ்ச்சியில் கமல், த்ரிஷா, சிம்பு உள்ளிட்டோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.
அதிலும் கமலிடம் கேட்கப்பட்ட கேள்வி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் த்ரிஷாவுக்கு திருமணம் எப்போது என்பது குறித்தும் திருமணம் என்றால் என்ன என்பது குறித்தும் தொகுப்பாளினி கேள்வி எழுப்பினார்.
த்ரிஷா
அதற்கு த்ரிஷா, எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. அது எனக்கு நடந்தாலும் ஒன்றுமில்லை, நடக்கவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை என தெரிவித்தார். அப்போது திருமணம் குறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது.
எம்பி பிரிட்டாஸ்
அவர் கூறுகையில், எம்.பி. பிரிட்டாஸ் உங்களை மாதிரி எதிரே உட்கார்ந்து கொண்டு ஒரு கேள்வி கேட்டார். அவர் என் நண்பர்தான். ஆனால் அவர் கேட்ட கேள்வி எனக்கு கொஞ்சம் கொக்கி போல் விழுந்தது. சுற்றி கல்லூரி மாணவிகள், இளைஞர்கள் எல்லாம் இருந்தாங்க.
பிராமண குடும்பம்
நான் சொல்வது 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என நினைக்கிறேன். "நீங்கள் பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவர், நீங்கள் இந்த மாதிரி ரெண்டு கல்யாணம் எல்லாம் செய்து கொள்வீர்களா" என கேட்டார். அதற்கு நான் பிராமண குடும்பத்திற்கும் கல்யாணம் செய்துகிட்டதற்கும் என்ன சம்பந்தம் என கேட்டேன்.
கடவுள் ராமர்
அதற்கு அவர் நீங்கள் குடும்பிடும் கடவுள் ராமராச்சே. அதையாவது ஃபாலோ செய்ய வேண்டாமா என கேட்டார். ஒன்னு நான் கும்பிடுவதே இல்லை. இன்னொன்று அப்படி பார்த்தால் கூட நான் ராமனின் அப்பா வகையறா. இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் பாக்கி இருக்குனு சொன்னேன் என்றார்.
வாணி கணபதி- சரிகா
கமல்ஹாசன் வாணி கணபதி என்பவரை கடந்த 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் அவரை 1988 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து சரிகாவை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கமல்- சரிகா ஜோடியும் விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
கைதட்டி ஆரவாரம்
கமல்ஹாசன் பேச பேச அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அது போல் தக்லைஃப் விழாவில் சிம்பு மீது கமல் காட்டிய பாசமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த விழாவில் சாப்பிடும் போது சிம்புவை அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்து சாப்பிட செய்தார். மேலும் சிம்புவை தனியாக நிற்க சொல்லி புகைப்படம் எடுக்க சொன்னார். சிம்புவும் அங்கு வந்தவர்களுடன் செல்பி எடுத்தார். இதுவும் வைரலாகி வருகிறது.
சிம்பு மீது பாசம்
அது போல் சிம்பு, பாசத்தில் டி.ராஜேந்தரை மிஞ்சிவிட்டார் என கமல் பாராட்டியுள்ளார். மேலும் அந்த பாடலில் சிம்புவின் ராட்சச எனர்ஜிக்கு ஈடு கொடுக்கணும்னுதான் நான் அப்படி ஆடினேன். எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் என் நெஞ்சில் சாய்ந்து அழுது சட்டையை நனைத்துவிடுவார் என கமல் பேச பேச சிம்பு சிரித்தபடியே இருந்தார்.












Click it and Unblock the Notifications