நடிகர் மாரிமுத்து பேசுன டயலாக்- "வலி வருது.. ஏதோ எச்சரிக்கை பண்ணுது..எனக்கு கெட்டது நடக்கப் போகுது"
சென்னை: தமிழ் திரை உலகத்தினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் திடீர் மரணம். அதுவும் டிவி தொடருக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற தகவல் நெஞ்சை உலுக்குகிறது.
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (வயது 56), தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்தவர். கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். பின்னர் உதவி இயக்குநரா, துணை நடிகராக பல படங்களில் நடித்திருந்தார். இயல்பான கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்பை வெளிப்படுத்தியதால் 'துணை நடிகர்' என்றில்லாமல் அவருக்கான ரசிகர் பட்டாளம் கொண்டாடி மகிழ்ந்தது.

டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் புகழின் அதி உச்சத்தை தொட்டார் மாரிமுத்து. தாம் பிறந்த மதுரை மண்ணின் மொழியை இயல்பாக பேசி நடித்ததால் ஏய் இந்தம்மா உள்ளிட்ட வசனங்கள் அவரை உச்சத்துக்கு கொண்டு போய் கொண்டாட வைத்தது. இந்த நிலையில்தான் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து மரணமடைந்தார் என்ற செய்தி பேரிடியாக விழுந்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் எதிர்நீச்சல் சீரியலில் மாரடைப்பு குறித்தும் தமக்கு ஏதோ நடக்கப் போகிறது, கெட்டதாக தெரிகிறது என மாரிமுத்து பேசிய வசனம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வசனம்:
#Marimuthu pic.twitter.com/r3suREzNLE
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) September 8, 2023
வலி வந்து அழுத்தது... அப்பப்ப வருது
அது உடம்புல வர்ற வலியா, மனசுல வர்ற வலியான்னு எனக்கு தெரியலை
ஒரே இதா இருக்கு.. அப்பப்ப வலி வருது.... வந்து ஏதோ எனக்கு எச்சரிக்கை பண்ணுது தோனுது
ஏதோ கெட்டது நடக்கப் போகுதுன்னு தோணுதுப்பா எனக்கு...

அதான் நெஞ்சுவலி மாதிரி வந்து எனக்கு காட்டுது
இல்லைடா... அந்த நெஞ்சுவலி வந்து அப்பப்ப மணி அடிச்சு என்னை எச்சரிக்கை பண்ணுதடா
ஏதோ மாறி மாறி பேசறன்னல்ல நானு... எனக்கே தெரியுது
இந்த வசனம்தான் சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மாரிமுத்து சீரியலில் பேசியது. இப்போது நிஜத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு நம்மைவிட்டு இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மரணமடைந்திருப்பது பெருந்துயரத்துக்குரியது!
சென்று வாருங்கள் மாரிமுத்து சார்!












Click it and Unblock the Notifications