மூணு டிகிரி முத்துக்காளை..சீக்கிரமா டாக்டர் ஆக போறாரு! ஸ்டண்ட் கலைஞனுக்குள் ஒளிந்திருந்த படிப்பாளி!
சென்னை: பிரபல காமெடி நடிகரான முத்துக்காளை தனது மூன்று டிகிரிகளை முடித்து பட்டம் வாங்கி இருக்கும் நிலையில் அடுத்ததாக டாக்டர் பட்டத்துக்காக ஆய்வு நடத்தி வருகிறார். ஆல்கஹால் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப் போவதாக ஏற்கனவே அவர் கூறியிருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களாக வலம் வந்த பலர், இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டனர். ஆனாலும் ஒரு சிலர் இன்னும் சினிமாவில் பிரபலமாக இருக்கிறார்கள். செந்தில் கவுண்டமணி, சந்தானம், சூரி, யோகி பாபு ஆகியோர் நாயகனுக்கு இணையாக நடித்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் அவர்களுக்கு துணையாக நடித்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் முத்துக்காளை, தம்பி ராமையா, அல்வா மனோகர் உள்ளிட்ட பலரை குறிப்பிடலாம். தற்போது சந்தானம், சூரி எப்படியோ அப்படி ஒரு காலத்தில் இருந்தவர்தான் நடிகர் சார்லி. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்தியாவில் இருக்கும் நடிகர்களிலேயே அதிக பட்டம் வாங்கியவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு இணையாக மற்றொரு நடிகரும் தமிழ் சினிமாவில் கல்விக்காக போராடி வென்றிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் முத்துக்காளை தான். ஸ்டண்ட் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பெப்சி விஜயனிடம் பணிபுரிந்தார். தொடர்ந்து பல படங்களில் நடிகர்களுக்கு டூப் போட்டு இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து அவர் நடித்த காமெடி காட்சிகள் பட்டயை கிளப்பியது. குறிப்பாக செத்து செத்து விளையாடுவோமா என்ற காமெடி பலரது ஆல் டைம் ஃபேவரைட்.
இந்த நிலையில் முத்துக்காளை 58 வயதில் மூன்று டிகிரி பெற்றது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெப்சி விஜயனுடன் கலந்து கொண்ட அவர் தனது படிப்பு குறித்து பேசி இருந்தார். அதாவது சிறுவயதில் படிக்காமல் விட்டதாலும் அதற்கு பிறகு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாலும் பல்வேறு சிரமங்களை சந்தித்தார். இதற்கிடையே தனது கவனத்தை படிப்பு பக்கம் திருப்பி அவர் மூன்று பட்டங்களை பெற்றிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பிஏ வரலாறு படித்து தேர்ச்சி பெற்றவர், 2019 ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார்.
இந்த நிலையில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (பி.லிட்) முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். அப்போது அவருக்கு வயது 58 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக முனைவர் பட்டத்திற்கு முயற்சித்து வருகிறார் முத்துக்காளை. ஏற்கனவே அவர் குடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலர் அவரை குடிகாரன் என விமர்சித்தனர். தன் மீதான விமர்சனங்களை உடைக்க வேண்டும் என அவர் தேர்ந்தெடுத்தது படிப்பை. தொடர்ந்து மூன்று டிகிரி முடித்த அவர் தற்போது ஆல்கஹால் குறித்து ஆய்வு செய்யலாம் என்று நினைப்பதாக பிரபல நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
தற்போது அதையே அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கிறார். ஆல்கஹாலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்து அதனை முனைவர் பட்டத்திற்காக முத்துக்காளை சமர்ப்பிக்க தயாராகி வருகிறார். தற்போது ஆராய்ச்சி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அந்த அறிக்கையை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற இருக்கிறார் என்கின்றர் திரையுலகினர்.












Click it and Unblock the Notifications