நடிகர் முத்துக்காளைக்கு சந்தோஷம் தாங்கல.. பிரபல கல்லூரியில் சேர்ந்த மகன்! உதவியது இந்த தயாரிப்பாளரா?
சென்னை: நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மகன் நடந்து முடிந்த +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக் கழக கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தொடக்க நாளான நேற்று, அவரை கல்லூரியில் விட்டுவிட்டு வந்தார் காமெடி நடிகர் முத்துக்காளை. முத்துக்காளையின் மகன் கல்லூரியில் சேர நடிகர் சங்கம் தான் உதவியுள்ளது.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களாக வளம் வந்த பலர், இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டனர். ஆனாலும் ஒரு சிலர் இன்னும் சினிமாவில் பிரபலமாக இருக்கிறார்கள். செந்தில் கவுண்டமணி, சந்தானம், சூரி, யோகி பாபு ஆகியோர் நாயகனுக்கு இணையாக நடித்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் அவர்களுக்கு துணையாக நடித்த நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் முத்துக்காளை நீண்ட நாட்களாக திரையுலகில் இருக்கிறார். ஸ்டண்ட் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பெப்சி விஜயனிடம் பணிபுரிந்தார்.

நடிகர் முத்துக்காளை
தொடர்ந்து பல படங்களில் நடிகர்களுக்கு டூப் போட்டு இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். தொடர்ந்து வடிவேலுவுடன் இணைந்து அவர் நடித்த காமெடி காட்சிகள் பட்டய கிளப்பியது. குறிப்பாக செத்து செத்து விளையாடுவோமா என்ற காமெடி பலரது ஆல் டைம் ஃபேவரட். இந்த நிலையில் முத்துக்காளை 58 வயதில் மூன்று டிகிரி பெற்றது சமூக வலைதளங்களை பேசுபொருளானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெப்சி விஜயனுடன் கலந்து கொண்ட அவர் தனது படிப்பு குறித்து பேசி இருந்தார்.
கல்வித் தகுதி
அதாவது சிறுவயதில் படிக்காமல் விட்டதாலும் அதற்கு பிறகு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் பல்வேறு சிரமங்களை சந்தித்தார். இதற்கிடையே தனது கவனத்தை படிப்பு பக்கம் திருப்பி அவர் மூன்று பட்டங்களை பெற்றிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பிஏ வரலாறு படித்து தேர்ச்சி பெற்றவர், 2019 ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றார். அவர் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (பி.லிட்) முதல் வகுப்பில் பட்டம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
முத்துக்காளை மகன்
இளமைக் காலத்தில் தான் படிக்காவிட்டாலும் தனது மகனையாவது நன்கு படிக்க வைக்க வேண்டுமென்பது முத்துக்காளையின் எண்ணம். அதற்கேற்றார் போர் அவரது மகன் முரளி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடந்த மே மாதம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 600க்கு 438 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார். அவரும் தந்தையில் கராத்தேயில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சியில் வென்ற தன்னுடைய மகனுக்கு அவருக்கு பிடித்த பால்கோவாவை வாங்கி கொடுத்து இருந்தார் முத்துக்காளை.
ஐசரி கணேஷ்
தொடர்ந்து தான் தான் படிக்கவில்லை, தனது மகனாவது நல்ல கல்லூரியில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது முத்துக்காளையின் ஆசை. இருந்தபோதும் வறுமை அவருக்கு தடையாக இருந்தது. இதை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உதவியை நாடினார். தொடர்ந்து நடிகர் சங்கத்தின் முயற்சியால் முத்துக்காளை மகனுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடத்திவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.காம் சீட் கிடைத்தது. இதை அடுத்து நேற்று தனது மகனை கல்லூரிக்கு அழைத்துச் சென்று முதல் நாள் வகுப்பில் விட்டுவிட்டு வந்திருக்கிறார் முத்துக்காளை. தற்போது அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications