"பாஜக ராதாரவி" இவர்தான்.. எதையுமே நான் அனுபவிக்கல.. திமுகதான் காரணம்.. பழனியில் பற்ற வைத்த நடிகர்
நடிகர் ராதாரவி, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புகழாரம் சூட்டி உள்ளார்
சென்னை: "பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார். எதிர்ப்பாக இருந்த பத்திரிக்கையாளர்கள் இப்போது அவரது பேச்சை பதிவு செய்ய விரும்புகின்றனர். அவர் நியாயமாக பேசுகிறார். அவரால் பலரும் நடுநிலைவாதியாக மாறி வருகின்றனர்" என்று நடிகர் ராதாரவி புகழாரம் சூட்டி உள்ளார்.
பழனி மலைக்கோயிலுக்கு நடிகர் ராதாரவி வந்திருந்தார்.. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை இராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்த அவர் தங்கத்தேர் புறப்பாடும் செய்தார்.
அவருடன் காங்கிரஸ் நிர்வாகி முருகானந்தம், சாய் மருத்துவமனை சுப்புராஜ், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதுமணத் தம்பதி
மலைக்கோயிலில் அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த புதுமணத் தம்பதியினர் ராதாரவியை பார்த்ததுமே, அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ள பிரியப்பட்டனர்.. அப்போது அவர்களுக்கு ராதாரவி அன்பளிப்பும் வழங்கினார்... இதன்பிறகு செய்தியாளர்களை ராதாரவி சந்தித்தார்.. அப்போது தமிழக பாஜக நிலவரம் உட்பட பல பிரச்சனைகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கருத்து கேள்விகள் கேட்டனர். அதற்கு ராதாரவி சொன்னதாவது:

பட்டினப்பிரவேசம்
தமிழகம் ஒரு ஆன்மீக பூமி.. தமிழகம் மட்டுமல்ல. இந்தியாவே ஒரு ஆன்மீக நாடு ஆகும்... பாரம்பரிய வழிபாட்டு முறைகளை மாற்றக் கூடாது. பட்டினப்பிரவேசத்துக்கு தடை விதித்து பின் திரும்ப உத்திரவை அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. உதாரணத்துக்கு பழனிக்கோயிலுக்கு படிவழியில் செல்லும் பக்தர்களை செல்லக்கூடாது என்று சொல்ல முடியாது. அதுபோலதான் பாரம்பரிய வழிபாட்டு முறையும்.

கோயில் நிதி
சிதம்பரம் கோயிலை பொறுத்தமட்டிலும் அங்கு அரசு சார்பாக சென்றாலே பிரச்னை தான் எழும். ஆனால் அங்கு எதுவும் செய்ய முடியாது. முதலில் அந்த கோயில் அரசு நிதியை எதிர்பார்த்து இயங்கும் கோயில் கிடையாது... . திமுக ஒராண்டு ஆட்சி என்பதை பொறுத்த வரை எதுவும் சொல்வதற்கில்லை... இந்த அரசால் நான் எதுவும் அனுபவிக்கவில்லை. எனக்கு வேண்டியதை நான் செய்து கொள்வதால் எதுவும் தெரியவில்லை...

சினிமாத்துறை
தமிழக சினிமாத்துறையில் சிலரது அதிகார துஷ்பிரயோகம் உள்ளதா என்று கேட்கிறீங்க.. அதில் உண்மை உள்ளது. அதே நேரம் பெரிய, பெரிய படங்களை அதிக முதலீடு போட்டு வாங்குவதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் அவர்கள் வாங்குகிறார்கள் என்பதே உண்மை. தெலுங்கு திரை உலகில் பலர் சேர்ந்து சிண்டிகேட் போட்டு படத்தை வாங்குகின்றனர். இங்கு அது போல இல்லை. படத்தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணத்தை எடுப்பது தான் முதல் கடமை.

பாலாபிஷேகம்
முன்பு பெரிய, பெரிய நடிகர்கள் படம் ஒரே நேரத்தில் திரையிடப்படும் போது இடையே சிறிய படமும் வெளியாகும். இது எதற்கு என்றால் அந்த திரையரங்குகள் நிரம்பி வழியும் போது அந்த கூட்டம் இந்த படத்துக்கு வரும். ஆனால் இப்போது பெரிய படங்கள் ஓடும் திரையரங்குகளே நிரம்புவதில்லை. யாரும் ஒரு படத்தை திரும்ப பார்ப்பதில்லை. ஓடிடி இப்போது அதிகமாகிவிட்டது. வரும் நாட்களில் ரசிகர்களின் பாலாபிஷேகம், டிக்கெட்டை வீசி ஆடும் ஆட்டம் இருக்காது. அதே நேரம் நடிகர்களுக்கு அவர்கள் சொல்லும் சம்பளமே எனும் நிலை வந்துவிடும். ஏனென்றால் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என தெரியாது.

அண்ணாமலை
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நல்லா பேசுகிறார். அவர் பேசுவதை தினமும் நான் பார்க்கிறேன். பத்திரிக்கையாளர் முதல் அனைவரையும் மரியாதையாக நடத்துகிறார்... முதலில் எதிர்ப்பாக பார்த்தவர்கள் இப்போது நட்புடன் பார்க்கின்றனர்.. பலரும் அவரது பேச்சால் நடுநிலைவாதியாக மாறிவிட்டனர். சமீப காலமாக நபிகள் பற்றி பேசிய பிரச்னையில் சிலர் தவறாக பேசியவர்கள் மீது குண்டு வீசுவோம் என்றனர்.. சிலர் பேசுவதை சிலர் பெரிதாக்குகின்றனர். இந்த பிரிவினைவாத அரசியல் நல்லதல்ல.

இஸ்லாம் நாடுகள்
ஹிஜாப் பற்றி வளர்ந்த இஸ்லாமிய நாடுகளில் கூட யாரும் கண்டு கொள்வதில்லை. நான் அங்கு சென்றதால் சொல்கிறேன். ஆனால் ஒரு மாநிலத்தில் சில பள்ளிகளில் ஏற்பட்ட பிரச்னை நாடு முழுதும் பிரதிபலிக்கிறது. சவுதி, அபுதாபி பெரிய இஸ்லாமிய நாடுகளே முன்பு இந்துக்கள் பொட்டு வைத்தால் அதை அழிக்க சொன்ன காலம் போய், அவர்களை அதை கண்டு கொள்வதில்லை. இருவர் செய்யும் பிரச்னையை இரண்டாயிரம் பேர் செய்ததாக கூறுகின்றனர்" என்றார். நீண்ட காலம் கழித்து, அதாவது தேர்தல் பிரச்சாரத்துக்கு பிறகு, மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார் ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications