’ஜெய்பீம்’ வறுமையில் வாடிய ரியல் ராஜாகண்ணு குடும்பம்! நேரில் அழைத்து 5 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்!
சென்னை : ஜெய்பீம் திரைப்படத்தில் காட்டப்பட்ட ராஜகண்ணு கதாபாத்திம் பலரது மனதையும் உருக்கிய நிலையில், உண்மையான ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
இயக்குநர் ஞானவேல் எழுதி இயக்கிய 'ஜெய் பீம்' படத்தை தயாரித்து நடித்திருந்தார் நடிகர் சூர்யா. மேலும், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தினையே 'ஜெய் பீம்' படமாக எடுத்திருந்தார்கள். ஓடிடியில் வெளியானாலும் பெரும் வெற்றியையும் வரவேற்பையும் பெற்ற இப்படம்.

ராஜாக்கண்ணு கதாபாத்திரம்
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. 1993-ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.

ஜெய்பீம் படம்
கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பதும் பிறகு விசாரணையில் தெரியவந்தது. இருளர் - பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே வழக்கு உயர்நீதிமன்றத்தை அடைந்தது.அந்த வழக்குதான் 'ஜெய் பீம்' படமாக உருவானது.

பார்வதி அம்மாள்
இந்நிலையில் ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது நிலைக்குறித்துக் கேள்விப்பட்ட நடிகர் லாரன்ஸ் தற்போது வீடுகட்டித் தருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஆனால் பார்வதி அம்மாளை நிலையை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் அவருக்கு வீடு கட்டித் தரப்படும் என அறிவித்தார். இதனால் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை நடிகர் லாரன்ஸ் ஒத்திவைத்தார்.

ராகவா லாரன்ஸ் உதவி
இந்நிலையில் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தர தான் வைத்திருந்த பணத்தை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தர முடிவு எடுத்தார் நடிகர் லாரன்ஸ். இதையடுத்து பார்வதி அம்மாள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவர் அவர்களிடம் வீடு கட்டுவதற்காக தான் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கினார். மேலும் வருங்காலத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறியதாக நிதியுடன் தெரிவித்துள்ளனர்















Click it and Unblock the Notifications