தேவர், பறையர் எல்லாம் அந்த காலத்துல.. நாங்குநேரி பள்ளி சாதிய கொடூரம்! நடிகர் ராஜ்கிரண் ஆதங்கம்
சென்னை: நாங்குநேரியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது குறித்து நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார்.

ராஜ்கிரண் பதிவு: "நான் பள்ளியில் படித்த காலங்களில்,
இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று
எல்லா மதங்களைச் சார்ந்த மாணவர்களும்,
பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர்,
நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று
எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும்
ஒன்றாகத்தான் படித்தோம்.
யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை.
ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக,
ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.
எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும்
எல்லா சாதி மதமும் கலந்து தான்
இருந்தார்கள். அவர்கள் அனைவரும்
எவ்வித பேதமும் பார்க்காமல்,
எல்லா மாணவர்களையும் தங்களின்
சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும்
அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.
இன்று,
மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது.
இப்படியான சூழல் எப்படி உருவானது ?
அந்தக்காலம் போல் இந்தக்காலமும்
மாறி விடாதா இறைவா என்று,
ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது...
நாங்குநேரி அவலம்..." என்று குறிப்பிட்டு உள்ளார்.
நாங்குநேரியில் நடந்தது என்ன?: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் சின்னத்துரை. பட்டியலினத்தை சேர்ந்த இவர் பள்ளியில் சக மாணவர்கள் சிலரால் சாதி ரீதியாக அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்து உள்ளார். அது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவர் புகார் செய்துள்ளார். அதன் விளைவாக தலைமை ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து கண்டித்து இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 6 பேர் கும்பல் சின்னதுரை வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக வெட்டி இருக்கின்றனர். அத்துடன் அதை தடுக்க முயன்ற அவரது தங்கை சந்திரா செல்வியையையும் வெட்டி இருக்கிறார். சின்னதுரையின் தாத்தாவை கீழ் தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர் மாரடைப்பில் இறந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிருக்குப் போராடி வரும் சின்னதுரைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து, சாதிய கொடுமைகளை கண்டித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications