எஸ்.வி.சேகர் மன்னிப்பு.. சட்டென மனம் மாறி நெகிழ வைத்த கோபால்சாமி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ-வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதனை மனுதாரர் கோபால்சாமி ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததால், நீதிமன்றம் எஸ்வி சேகரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கையும், நெல்லையில் எஸ்.வி.சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்.வி.சேகர் மற்றும் அவருக்கு எதிராக நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கோபால்சாமி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.அப்போது எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு எஸ்.வி.சேகர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் .
இதைத்தொடர்ந்து மனுதாரரிடம், எஸ்.வி.சேகர் தனது பதிவை நீக்கி விட்டதாகவும், மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் சொல்கிறாரே, நீங்கள் வழக்கை தொடர விரும்புகிறீர்களா? என நீதிபதி கேட்டார். அதற்கு மனுதாரர் கோபால்சாமி வழக்கை தொடர இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், . நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார். மனுதாரரான அய்.கோபால்சாமி, எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எஸ்.வி.சேகர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications