இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலுவிற்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம்? வெளியான பகீர் தகவல்
நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நடிகர் வடிவேலு உள்ளிட்டோரு போலியான டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதிப்பிற்குரியவர்களுக்கும் தங்கள் துறையில் சாதித்தவர்களுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வெவ்வேறு பல்கலைக்கழகங்கால் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் பல்கலைக்கழகமே இல்லாத ஒரு அமைப்பு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் என்ற மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளது.
இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், சாண்டி மாஸ்டர், ஈரோடு மகேஷ் உள்ளிட்ட சில பிரபலங்களை முன்னிறுத்தி 50-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை அந்த அமைப்பு வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளன.

மனித உரிமை ஆணையம்
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் விருது நிகழ்ச்சி என்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைக்கழகம் என்பதை பெரிதாக அச்சடித்திருந்தனர். அது போல் அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக் கூடிய அரசு முத்திரையும் இந்த அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகம்
இதனால் அண்ணா பல்கலைக்கழகம்தான் தங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதாக பலர் கருதினர். இந்த நிகழ்ச்சியில் தனியார் கோயில் நிர்வாகிகள், ஜோதிடர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் டாக்டர் பட்டம் பெற வராமல் இருந்த நடிகர் வடிவேலுக்கு வீடு தேடி சென்று பொழுதுபோக்கு பிரிவில் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர்
மேலும் தங்களை ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நெருக்கமானவர்கள் என அந்த விருது கொடுத்த அமைப்பு கட்டுக்கதைகளை அள்ளிவிட்டதாகவும் தெரிகிறது. வடிவேலுவிடமும் தங்கள் கவுன்சில் சார்பில் மதிப்புறு முனைவர் என்கிற கவுரவ டாக்டர் பட்டம் தருவதாக கூறி அந்த போலி ஆவணத்தை கொடுத்த வீடியோவும் வெளியானது.

அண்ணா பல்கலைக்கழகம் முத்திரை
இந்த தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அரசு முத்திரை எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. நடிகர் வடிவேல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என நம்பப்பட்டது. ஆனால் அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் வடிவேல் நடித்து வருகிறார். மேலும் சந்திரமுகி 2 படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications